Headlines

அரோகரா கோஷத்தால் அதிர்ந்தது யாழ்ப்பாணம்: நல்லூர் கந்தசுவாமி ஆலயத் தேர்த் திருவிழா கோலாகலம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழாவின் சிகரமான தேர்த் திருவிழா இன்று (09) காலை பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றது.

இன்று காலை வசந்த மண்டப பூஜைகள் சிறப்பாக இடம்பெற்றதனைத் தொடர்ந்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்த மக்களின் “அரோகரா” கோஷங்களுக்கு மத்தியில், அலங்காரக் கந்தனாக ஆறுமுகப் பெருமான் சித்திரத் தேரில் ஆரோகணித்து வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்றையதினம் (08) சப்பரத் திருவிழா வெகுவிமர்சையாக இடம்பெற்றிருந்த நிலையிலேயே, இன்றைய தேர்த்திருவிழா பக்திபூர்வமாக நடைபெற்றுள்ளது.

கடந்த மாதம் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூரானின் வருடாந்தப் பெருவிழா, நாளையதினம் (10) நடைபெறும் தீர்த்தத் திருவிழா மற்றும் கொடியிறக்கத்துடன் இனிதே நிறைவடையவுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்த் திருவிழாவைக் காண்பதற்காக நாட்டின் பல்வேறு பாகங்களிலுமிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் யாழ்ப்பாணத்தில் திரண்டுள்ளனர். அத்துடன், நல்லூரானைத் தரிசிப்பதற்காகவும், நேர்த்திக்கடன்களைச் செலுத்துவதற்காகவும் பெருமளவான புலம்பெயர் தமிழர்களும் தாயகம் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *