2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் இன்றுடன் (செப்டெம்பர் 21) அதிகாரத்திற்கு வந்து இரண்டு ஆண்டுகளைப் பூர்த்தி செய்கிறது.
2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அனுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்று, நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
இந்தத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க 5,634,915 வாக்குகளை (42.31%) பெற்றார். அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) வேட்பாளர் சஜித் பிரேமதாச 4,363,035 வாக்குகளைப் பெற்றார். எந்தவொரு வேட்பாளரும் முதல் விருப்பு வாக்குகளில் 50% இற்கும் அதிகமான வாக்குகளைப் பெறாத காரணத்தால், இரண்டாவது விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டன. அதன் அடிப்படையில், அனுர குமார திஸாநாயக்க மொத்தம் 5,740,179 வாக்குகளைப் பெற்று புதிய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, 2024 நவம்பரில் நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களைப் பெரும்பான்மையாகப் பெற்று ஒரு நிலையான அரசாங்கத்தை அமைத்தது.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில், “இரண்டு ஆண்டுகள் பலம். அனைவருக்கும் முன்னேற்றம்” என்ற தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் பல மாபெரும் மக்கள் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெறும் இந்த மக்கள் கூட்டங்கள், கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் அடைந்த வெற்றிகள், நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் எதிர்காலத் தொலைநோக்கு குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
