Headlines

செப்டெம்பர் 19 நாடு திரும்புவார் என அறிவிக்கப்பட்ட ஷிராந்தி ராஜபக்ச இதுவரை இலங்கை வரவில்லை!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியாரான ஷிராந்தி ராஜபக்ச, செப்டெம்பர் 19 ஆம் திகதி இலங்கைக்குத் திரும்புவார் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் இதுவரை நாட்டை வந்தடையவில்லை.

மகிந்த ராஜபக்சவின் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே, செய்திச் சேவை ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கிடையில், செப்டெம்பர் 16 ஆம் திகதி ஷிராந்தி ராஜபக்சவுடன் சிங்கப்பூருக்குப் பயணம் செய்த அவரது பெண் உறவினர் ஒருவர் நேற்றிரவு இலங்கை திரும்பியுள்ளார்.

ஷிராந்தி ராஜபக்ச நாடு திரும்பாதமைக்கான காரணங்களையோ அல்லது அவரது தற்போதைய இருப்பிடம் குறித்தோ விபரங்களை வெளியிட குடும்ப உறுப்பினர்கள் தயாராக இல்லை என சட்டத்தரணி மனோஜ் கமகே மேலும் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்த ஷிராந்தி ராஜபக்ச, மேலதிக மருத்துவ சிகிச்சைக்காகவே செப்டெம்பர் 16 ஆம் திகதி சிங்கப்பூர் சென்றதாக கமகே இதற்கு முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

ஷிராந்தி ராஜபக்சவின் தலைமையின் கீழ் இயங்கிய ‘சிரிலிய சவிய’ அமைப்பின் நிதிப் பரிவர்த்தனைகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் சம்பந்தமாக, எதிர்வரும் செப்டெம்பர் 24 ஆம் திகதி பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *