மாநகர சபை அலுவலகத்திலேயே போதைப்பொருள் விற்பனை: ஊழியர் கைது!
கொழும்பு: கொழும்பு மாநகர சபையின் (CMC) அலுவலக உதவியாளர் ஒருவர், மாநகர சபை ஊழியர்களுக்கே தனது அலுவலக அறையிலிருந்து ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பல் பூங்காவிற்கு அருகிலுள்ள மாநகர சபைக் கட்டடத்தில் உள்ள தனது அலுவலக அறையிலேயே, அவர் நீண்டகாலமாக போதைப்பொருட்களைப் பொதி செய்து விநியோகித்து வந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை (22) வலான ஊழல் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது, அவரிடமிருந்து 20 கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்கப்பட்டது.
38 வயதான குறித்த சந்தேகநபர், பொரளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, அலுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரைத் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநகர சபைக்குள்ளேயே நடந்த இந்த போதைப்பொருள் வர்த்தகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
