Headlines

அமைச்சர் ராஜினாமா முக்கியமே இல்லை”: சோனம் வாங்சுக் திடீர் விளக்கம்!

டெல்லி: நீட் தேர்வு முறைகேடு மற்றும் கல்வித் துறையில் சீர்திருத்தம் கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 26 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், நேற்று முன்தினம் இரவு தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார். கரப்பான் பூச்சி கட்சி நடத்தி வரும் மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாகக் கடந்த ஜூன் 28ஆம் தேதி முதல் அவர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தார்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது இப்போராட்டத்தின் பிரதான கோரிக்கைகளில் ஒன்றாக இருந்தது. இருப்பினும், அந்தக் கோரிக்கை நிறைவேறும் முன்பே சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டது அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய அரசுடன் ஏதோ ரகசிய உடன்பாடு செய்து கொண்டு அவர் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டார் என்ற விமர்சனங்களும் எழுந்தன.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சோனம் வாங்சுக், இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் 24 நிமிடங்கள் கொண்ட விரிவான வீடியோ விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மாணவர்கள் பாதுகாப்பே முக்கியம்:

உண்ணாவிரதத்தை முடித்தது குறித்து முதல் முறையாக விளக்கமளித்த சோனம் வாங்சுக், “அமைச்சரின் ராஜினாமா முக்கியமான விஷயம்தான். ஆனால் பேச்சுவார்த்தையின் போது நான் அதை வலியுறுத்தவில்லை. மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படக் கூடாது, அவர்கள் மீது தேவையற்ற வழக்குகள் பதிவு செய்யப்படக் கூடாது என்பதே எனது முதல் கவலையாக இருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், கடந்த ஆண்டு லடாக்கில் நடந்த போராட்டத்தின் போது பாதுகாப்பு படையினர் நடத்திய கடுமையான நடவடிக்கைகள் அவருக்கு நினைவுக்கு வந்ததாகவும், அதுபோன்ற சம்பவம் டெல்லியிலும் நடைபெறக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். தான் உண்ணாவிரதத்தை முடித்து அமைதிக்காக அழைப்பு விடுத்தால் நிலைமை சுமுகமாகும் என்று நம்பியதாகவும் அவர் தெரிவித்தார்.

ராஜினாமா தவிர்க்க முடியாதது:

அமைச்சரின் ராஜினாமா குறித்துப் பேசிய அவர், “அமைச்சரை ராஜினாமா செய்ய வைப்பது என் தனிப்பட்ட பொறுப்பு அல்ல. மாணவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்படாமல் இருப்பதற்கான எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்பதே எனது பிரதான நோக்கமாக இருந்தது.

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்வது காலத்தின் கட்டாயம். அது நடந்தே தீரும். ராஜினாமா என்பது மத்திய அரசுக்கு மிகவும் சிறிய விஷயம். ஆனால் அதை செய்யாமல் இருப்பதால் நாடு முழுவதும் அவர்களின் நற்பெயர் பாதிக்கப்படுகிறது. மக்கள் கோபமாக உள்ளனர். எனவே சீக்கிரமே அந்த ராஜினாமா நடந்தே தீரும் என்பது எனக்குத் தெரியும். அதனால் அந்த கோரிக்கையை நான் பேச்சுவார்த்தையில் அதிகமாக வலியுறுத்தவில்லை” என்றார்.

ரகசிய உடன்பாடு மறுப்பு:

மத்திய அரசுடன் எந்தவித ரகசிய உடன்பாடும் (டீல்) செய்யவில்லை என அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். “நான் ஏதோ மத்திய அரசுடன் டீல் போட்டுவிட்டதாகச் சிலர் சொல்கிறார்கள். அப்படி டீல் போட நினைத்திருந்தால் டெல்லி வெயிலில் 26 நாட்கள் பட்டினி கிடக்க வேண்டிய அவசியமே இல்லை. குளிர்சாதன அறையில் இருந்தபடியே பேசி முடித்திருக்கலாம்” என அவர் காட்டமாகக் கூறியுள்ளார்.

மாணவர்கள் மீதான வழக்குகள் குறித்து ஆரம்பத்தில் வாய்மொழி உறுதி மட்டுமே வழங்கப்பட்டதாகவும், பின்னர் தனது உறுதியான வலியுறுத்தலின் பேரில் மத்திய அரசு எழுத்துப்பூர்வமான உறுதிமொழியை அளித்ததாகவும் வாங்சுக் குறிப்பிட்டார்.

மத்திய அரசு அளித்த எழுத்துப்பூர்வமான உறுதிமொழியில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படாது, தேர்வு சீர்திருத்தங்கள் மற்றும் கேள்வித்தாள் லீக் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தப்படும், நீட் தொடர்பான தற்கொலையால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்துப் பரிசீலிக்கப்படும் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

போராட்டம் தொடரும்:

பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் காரணமாக நள்ளிரவில் உண்ணாவிரதத்தை முடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக விளக்கிய சோனம் வாங்சுக், மாணவர்களின் நலனுக்காகத் தொடங்கிய இந்தப் போராட்டம் தொடரும் என்றும், தர்மேந்திர பிரதானின் ராஜினாமா உள்ளிட்ட கோரிக்கைகளை மாணவர் இயக்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தும் என்றும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *