Headlines

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் உரிமை கோரப்படாத 1,025 வாகனங்கள்: ஏலத்தில் விற்க சுங்கம் தீர்மானம்!

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 1,025 வாகனங்கள், இறக்குமதியாளர்களினால் இதுவரை விடுவிக்கப்படாமல் துறைமுக வளாகத்திலேயே தேங்கிக் கிடப்பதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சுங்கப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா, இந்த வாகனங்களில் 625 வாகனங்கள் இலங்கையை வந்தடைந்து ஆறு மாதங்களுக்கும் மேலாகின்றன என்றார்.

இருப்பினும், இந்த வாகனங்கள் எதுவும் சுங்கக் குற்றங்களுக்கோ அல்லது விதிமீறல்களுக்கோ உட்பட்டவை அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 129 ஆவது பிரிவின் கீழ், சுங்க விதிமீறல்கள் ஏதுமின்றி, நீண்ட நாட்களாக உரிமை கோரப்படாமல் இருக்கும் வாகனங்கள் எதிர்காலத்தில் பகிரங்க ஏலம் அல்லது டெண்டர் நடைமுறை மூலம் விற்பனை செய்யப்படும் என புஞ்சிஹேவா குறிப்பிட்டார்.

இலங்கை சட்டத்தின்படி, இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களும் துறைமுகத்திற்கு வந்தடைந்த ஒரு மாத காலத்திற்குள் உரிய வரிகள் மற்றும் கட்டணங்களைச் செலுத்தி விடுவிக்கப்பட வேண்டும். இறக்குமதியாளர்கள் அவ்வாறு செய்யத் தவறினால், அந்தப் பொருட்களை விற்பனை செய்து, அரசாங்கத்திற்குச் சேர வேண்டிய வரிகளை மீளப் பெறவும், துறைமுக மற்றும் களஞ்சியக் கட்டணங்களைச் செலுத்தவும் சுங்கத் திணைக்களத்திற்கு சட்டபூர்வ அதிகாரம் உள்ளது.

அனைத்து வரிகள் மற்றும் கட்டணங்கள் கழிக்கப்பட்ட பின்னர், மீதமுள்ள தொகை ஏதேனும் இருந்தால் அது இறக்குமதியாளருக்கு வழங்கப்படும்.

இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக விடுவிக்கப்படாமல் இருந்தால், அது குறித்து துறைமுக அதிகாரசபை இலங்கை சுங்கத்திற்கு அறிவிக்க வேண்டும். இந்த வாகனங்கள் தொடர்பில் சுங்கத் திணைக்களத்திற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை அகற்றுவதற்கான தேவையான நடவடிக்கைகளை சுங்கம் முன்னெடுக்கும் என்றும் பேச்சாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், உரிய காலப்பகுதிக்குள் வாகனங்களை விடுவிக்க முடியாமைக்கான நியாயமான காரணங்களை முன்வைக்கும் இறக்குமதியாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க சுங்கத் திணைக்களம் தயாராக உள்ளது என்றும் சந்தன புஞ்சிஹேவா மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *