2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில், முன் அறிவிப்புகள் கிடைத்திருந்தும் அதனைத் தடுக்கத் தவறியமை மற்றும் குற்றவியல் அலட்சியம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோருக்கு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் இன்று (31) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியமைக்காக, கடமையைச் செய்யத் தவறியமை, கொலை முயற்சி மற்றும் கொலை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டதை அடுத்தே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நீதியரசர்களான பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய மற்றும் திலகரத்ன பண்டார ஆகியோர் அடங்கிய மூவர் அடங்கிய கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற ஆயத்தினால் இந்த வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
முன்னதாக, 2022 ஆம் ஆண்டில் மூவர் அடங்கிய மேல் நீதிமன்ற ஆயம் இந்த இரு பிரதிவாதிகளையும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்திருந்தது. இருப்பினும், சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டினைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பேரில், பிரதிவாதிகளின் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டது.
275 பேரின் மரணத்துக்கும், 500 இற்கும் மேற்பட்டோரின் காயங்களுக்கும் காரணமான ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியமைக்காக, சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் 855 குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முன்னாள் ஐஜிபி ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
