Headlines

எல்பிஎல் கிரிக்கெட் வரலாறு: யாழ்ப்பாணத்தை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் மகுடம் சூடியது காலி கெலன்ட்ஸ்!

கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், யாழ்ப்பாணம் கிங்ஸ் அணியை 5 விக்கெட்டுகளால் வீழ்த்தி காலி கெலன்ட்ஸ் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தது.

குறைந்த ஓட்டங்கள் பெறப்பட்ட இந்த இறுதிப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் கிங்ஸ் அணியை 123 ஓட்டங்களுக்குக் கட்டுப்படுத்திய காலி அணி, பின்னர் 126 ஓட்டங்களை 5 விக்கெட்டுகளை இழந்து பெற்று வெற்றியிலக்கை அடைந்தது. இன்னும் 25 பந்துகள் மீதமிருந்த நிலையில் இந்த வரலாற்று வெற்றியை காலி அணி பதிவு செய்தது.

காலி அணியின் வெற்றிக்கு பந்துவீச்சில் முதுகெலும்பாகத் திகழ்ந்த சரித் அசலங்க மற்றும் இஷான் மாலிங்க தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அசலங்க 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், மாலிங்க 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி யாழ்ப்பாண அணியின் துடுப்பாட்ட வரிசையைச் சரித்தனர்.

யாழ்ப்பாணம் அணி சார்பில் கமில் மிஷார 32 பந்துகளில் 41 ஓட்டங்களைப் பெற்றார். இருப்பினும், அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால் அவர்களால் பெரிய ஓட்ட எண்ணிக்கையை எட்ட முடியவில்லை. சாமிந்து விக்ரமசிங்க 25 ஓட்டங்களைச் சேர்த்தார். காலி அணி சார்பில் தரிந்து ரத்நாயக்க இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய காலி அணிக்கு ஆரம்பத்திலேயே பின்னடைவு ஏற்பட்டது. சாம் ஹார்பர் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். இருப்பினும், டாம் ரோஜர்ஸ் நிதானமாக விளையாடி 27 பந்துகளில் 34 ஓட்டங்களைப் பெற்று இன்னிங்ஸை வலுப்படுத்தினார். பின்னர் வந்த தினுர கலுபஹன 19 பந்துகளில் 31 ஓட்டங்களை விளாசினார்.

9ஆவது ஓவரில் ஷகிப் அல் ஹசன், ரோஜர்ஸ் மற்றும் கலுபஹன ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி யாழ்ப்பாண அணிக்கு நம்பிக்கையளித்தார். அதனைத் தொடர்ந்து சாமிக்க கருணாரத்னவும் ஆட்டமிழந்தார்.

இருப்பினும், இறுதி நேரத்தில் தசுன் ஷானக்க மற்றும் சஹான் ஆராச்சிகே ஆகியோர் பொறுப்புடன் விளையாடி காலி அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றனர். கடந்த காலங்களில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை நூலிழையில் இழந்த காலி கெலன்ட்ஸ் அணிக்கு இது கன்னி எல்பிஎல் மகுடமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *