அத்தனகல்ல, கரஸ்நாகல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர பராமரிப்புப் பணிகள் காரணமாக, கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (NWSDB) அறிவித்துள்ளது.
தேசிய நீர் வழங்கல் சபையின் அறிவிப்பின்படி, இன்று (16) காலை 8:00 மணி முதல் நாளை (17) அதிகாலை 3:00 மணி வரை 19 மணி நேரத்திற்கு இந்த நீர்வெட்டு அமுலில் இருக்கும்.
இந்த நீர்வெட்டினால் கம்பஹா மாநகர சபை, கம்பஹா பிரதேச சபை மற்றும் மஹர பிரதேச சபை ஆகியவற்றுக்கு உட்பட்ட பகுதிகள், அத்துடன் வெலிவேரிய, பலும்மஹர, ரத்துபஸ்வல, மினுவாங்கொட, அஸ்கிரிய, உடுகம்பொல, ஓப்பாத மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் பாதிக்கப்படும்.
மேலும், ரன்பொக்குணுகம வீடமைப்புத் திட்டம், உராபொல, அத்தனகல்ல, பத்தலிய, வட்டுபிட்டிவல, நிட்டம்புவ, வேயங்கொட, கலகெடிஹேன, திஹாரிய, நைவல மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
