தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் கலாநிதி போல் கபூர், இன்று பிற்பகல் (22) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவைச் சந்தித்தார். இச்சந்திப்பின் போது, இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வாஷிங்டனின் அர்ப்பணிப்பை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இந்தச் சந்திப்பில், இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான 77 ஆண்டுகால இருதரப்பு உறவுகளை இரு தரப்பினரும் நினைவு கூர்ந்ததுடன், இந்த உறவு வர்த்தகம், பாதுகாப்பு, முதலீடு, சுற்றுலா மற்றும் மக்களுக்கு இடையிலான தொடர்புகள் எனப் பல பரிமாணங்களைக் கொண்ட வலுவான பங்காளியாகத் தழைத்தோங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டினர்.
தற்போது நிலவும் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்துத் திருப்தி வெளியிட்ட உதவி இராஜாங்கச் செயலாளர் கபூர், இந்த ஒத்துழைப்பைப் பேணவும், மேலும் வலுப்படுத்தவும் அமெரிக்கா அர்ப்பணிப்புடன் உள்ளதாக மீண்டும் உறுதிப்படுத்தினார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமை குறித்தும் கலந்துரையாடப்பட்டது, அங்கு நிலவும் முன்னேற்றங்கள் சாதகமான திசையை நோக்கி நகர்வதாக இரு தரப்பினரும் குறிப்பிட்டனர். ஜூன் 19 ஆம் திகதி எட்டப்பட்ட அமைதி உடன்படிக்கை, அந்தப் பிராந்தியத்தை நிரந்தர அமைதியை நோக்கி இட்டுச் செல்ல உதவும் என்று அவர்கள் நம்பிக்கை வெளியிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இலங்கைக் கடற்பரப்பிற்கு அருகில் கடந்த மார்ச் மாதம் சிரமத்திற்குள்ளான இரண்டு கப்பல்களுக்கு, சர்வதேச சட்டக் கட்டமைப்பிற்குள் இலங்கை மனிதாபிமான உதவிகளை வழங்கியதை ஜனாதிபதி நினைவு கூர்ந்தார். இலங்கையினால் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைகளை அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் பாராட்டினார்.
பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கு இலங்கை தனது முழுமையான ஆதரவை வழங்க அர்ப்பணிப்புடன் உள்ளது என்றும் ஜனாதிபதி திஸாநாயக்க மேலும் வலியுறுத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் குறித்தும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது. இலங்கை ஏற்றுமதிக்கான ஒரே மிகப்பெரிய நாடாக அமெரிக்கா தொடர்ந்து விளங்கி வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் இருதரப்பு வர்த்தக ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்தும், இலங்கை ஏற்றுமதிகள் மீது விதிக்கப்படும் வரிகள் குறித்தும் கலந்துரையாடல்கள் மையப்படுத்தப்பட்டன.
இலங்கை ஒரு சிறிய பொருளாதாரம் என்பதால், அதனை அமெரிக்கா போன்ற ஒரு பெரிய பொருளாதாரத்துடன் ஒப்பிட முடியாது என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக இடைவெளியைக் குறைப்பது சவாலான பணியாக இருக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக உடன்படிக்கை தொடர்பான விடயங்களை விரைவாக முடிவுக்குக் கொண்டு வருவதன் முக்கியத்துவம் குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடினர் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இந்தச் சந்திப்பில் தொழிலாளர் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமானாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அமெரிக்கத் தூதுக்குழுவில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் பாரப்பொறுப்பாளர் (Chargé d’Affaires) ஜேன் ஹோவெல், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட பொருளாதாரத் திட்ட மேலாளர் மெத்யூ ரிட்ஜ்வே மற்றும் அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் பிரிவின் பிரதானி ஷைலஜா கிம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
