Headlines

தண்டவாளம் மாறிய சாகரிகா ரயில் இன்று முதல் மீண்டும் இயக்கம்!

தண்டவாளம் மாறிய சாகரிகா ரயில் இன்று (27) முதல் மீண்டும் சேவையில் ஈடுபடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் ரயில் வழமையான கால அட்டவணையின்படி இயங்கும் என போக்குவரத்து அத்தியட்சகர் அசங்க சமரசிங்க தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி பெலியத்தவில் இருந்து மருதானை நோக்கிப் பயணித்த சாகரிகா ரயில், வாத்துவ ரயில் நிலையத்தில் தண்டவாளம் மாறியது. இந்தச் சம்பவத்தின் போது, ரயிலின் 13 பெட்டிகளில் 11 பெட்டிகள் தண்டவாளம் மாறியிருந்தன.

இந்த விபத்தைத் தொடர்ந்து, ரயிலில் பணியில் இருந்த நான்கு ஊழியர்கள் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது நடைபெற்று வரும் விசாரணைகள் முடியும் வரை அவர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட மாட்டார்கள்.

அதன்படி, ரயில் ஓட்டுநர், காட் (Guard), உதவி ஓட்டுநர் மற்றும் உதவி காட் ஆகியோர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், ரயில்வே அமைப்பிற்குள் நிலவும் நிர்வாகக் குறைபாடுகளை மூடிமறைக்கவே இந்த இடைநிறுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கக் கூட்டணி (RTUA) குற்றம் சுமத்தியுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு உள்ள ரயில்களை சேவையிலிருந்து விலக்கிக் கொள்ளவும், ரயில் சேவைகளின் போது வேகக் கட்டுப்பாடுகளைக் கண்டிப்பாகப் பின்பற்றவும் ரயில் ஓட்டுநர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் அழைப்பாளர் இந்திக தொடம்கொட மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *