கொழும்பில் இருந்து பதுளை நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) பஸ் ஒன்று, தியத்தலாவை புகையிரத நிலையத்திற்கு அருகில் 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தியத்தலாவை ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய கண்காணிப்பாளர் டாக்டர் டபிள்யூ.கே.எல்.எம். வீரசேகர கூறுகையில், விபத்தில் 42 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
அதன்படி, மேலதிக சிகிச்சைக்காக ஒரு நோயாளி பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 8 பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன. எஞ்சிய நோயாளிகளின் நிலை சீராக உள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
