Headlines

தேர்தல் நாடகம் முடிந்தது; பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி சாமானியனைச் சல்லடையாக்கும் மத்திய அரசு!

சென்னை:

தேர்தல் முடியும்வரை மௌனம் சாதித்த மத்திய அரசு, வாக்குப்பதிவுகள் முடிந்த கையோடு தன் உண்மையான முகத்தைக் காட்டியுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம்காட்டி, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை வரலாறு காணாத வகையில் உயர்த்துவதற்கு எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அதிரடி அனுமதி, ஏற்கனவே விலைவாசி உயர்வால் தவிக்கும் சாமானிய மக்களின் தலையில் பேரிடியாக இறங்கியுள்ளது.

விலை உயர்வு விவரம்:

மத்திய அரசின் இந்த அனுமதியைத் தொடர்ந்து, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3.10-ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3.08-ம் உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.90-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.95.47-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தேர்தல் முடிந்து சில நாட்களிலேயே இந்த அளவு பெரிய விலை உயர்வு என்பது மக்களை ஏமாற்றும் செயல் என்று அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பிரதமரின் ‘சிக்கன’ உபதேசம் – வெறும் பேச்சுதானா?

இந்த விலை உயர்வுக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ‘சிக்கனம்’ கடைப்பிடிக்க வேண்டும் என்று அன்புக்கட்டளை விடுத்திருந்தார். மக்கள் பொது போக்குவரத்து மற்றும் மின்சார வாகனங்களைப் பயன்படுத்தி எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும், நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும், தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்ப்பது, தங்கம் வாங்குவதைக் குறைப்பது போன்ற ஆலோசனைகளையும் அவர் வழங்கினார்.

ஆனால், பிரதமர் இவ்வளவு உபதேசங்களைச் செய்த சில மணி நேரங்களிலேயே, அவரே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த அனுமதித்திருப்பது, ‘சிக்கனம்’ என்பது ஏழை மக்களுக்கானதா? அல்லது ஆட்சியாளர்களின் தவறான பொருளாதாரக் கொள்கைகளை மூடிமறைப்பதற்கானதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அரசின் அந்நியச் செலாவணியைப் பாதுகாக்க மக்கள் தங்கம் வாங்கக் கூடாது என்று சொல்லும் அரசு, சாமானியனின் அத்தியாவசியத் தேவையான எரிபொருளின் விலையைக் குறைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

மக்களின் வாழ்வாதாரத்தில் இடி:

ஏற்கனவே ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசியால் மக்கள் திணறி வரும் சூழலில், இந்த எரிபொருள் விலை உயர்வு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது. எரிபொருள் விலை உயர்ந்தால், போக்குவரத்துச் செலவு அதிகரிக்கும். இது பால், காய்கறி, மளிகை பொருட்கள் என அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் கணிசமாக உயர்த்தும்.

நிரந்தரமில்லாத வேலை, குறைந்த சம்பளம் என நாடு முழுவதும் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்காகத் தவித்து வருகின்றனர். விவசாயிகளும் விளை பொருட்களுக்குப் போதுமான விலை கிடைக்காமல் தற்கொலை வரை சென்றுள்ளனர். இவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு எடுத்த எந்த முயற்சியும் பலன் அளிக்காத நிலையில், இப்போது எரிபொருள் விலை உயர்வு இவர்களின் வாழ்க்கையை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தேர்தல் முடியும்வரை காத்திருந்து, இப்போது ‘சர்வதேச விலை’ என்ற நொண்டிச்சாக்கைச் சொல்லி கொள்ளையடிப்பதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *