நாட்டின் எரிசக்தித் துறையில் நெருக்கடி நிலை உருவாகியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். உலக சந்தையில் எரிபொருள் மற்றும் நிலக்கரி விலை அதிகரிப்பு, அத்துடன் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளமை ஆகியவற்றை இதற்குக் காரணமாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் (NPP) கொழும்பு மாவட்ட மே தினப் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி, பொதுமக்களின் சுமையைக் குறைப்பதற்காக அரசாங்கம் தற்போது டீசல் லீற்றர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியம் வழங்கி வருவதாகக் கூறினார்.
“இன்று, டீசல் லீற்றர் ஒன்றின் உண்மையான விலை 482 ரூபாயாகும், ஆனால் எரிபொருள் கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய நிறுவனங்கள் ஊடாக அரசாங்கம் லீற்றர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியம் வழங்குவதால் நுகர்வோர் அதனை 382 ரூபாய்க்கு கொள்வனவு செய்ய முடிகிறது,” என அவர் குறிப்பிட்டார்.
உலக சந்தையில் எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் போதிலும், எரிபொருள் மானியங்களைப் பேணுவதற்காக அரசாங்கம் 60 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதாக ஜனாதிபதி திசாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் வரையறுக்கப்பட்ட எரிபொருள் விலை திருத்தங்கள் அவசியமாகலாம் என்றாலும், பொதுமக்களுக்கு அதிகபட்ச நிவாரணத்தை வழங்க அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.
“இருப்பினும், விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நாங்கள் சிறிய அளவிலான எரிபொருள் விலை அதிகரிப்புகளை நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கலாம், ஆனால் அதிகபட்ச மானியங்களை வழங்க நாங்கள் உழைக்கிறோம். எரிசக்தித் துறையில் நெருக்கடி உள்ளது; நிலக்கரி விலை உயர்ந்துள்ளது, எரிபொருள் விலையும் உயர்ந்துள்ளது,” என்று அவர் கூறினார்.
மின்சாரத் துறையிலுள்ள சவால்களையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார், நிலக்கரி விலை அதிகரிப்பு மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளமை மின் உற்பத்திச் செலவு மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.
எந்தவொரு கட்டண அதிகரிப்பையும் விதிக்காமல் 96 சதவீத நுகர்வோருக்கு மின்சார மானியங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், அதற்காக 15 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்
