மீகமுவ சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை மோதலின் போது உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள், இன்று (08) காலை வெலிக்கடை சிறைச்சாலைக்கு இறுதி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. உயிரிழந்த அதிகாரிகளுக்கு இறுதி மரியாதை மற்றும் அஞ்சலிகள் செலுத்தப்பட்டதன் பின்னர், அவர்களின் உடல்கள் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளன.
கடந்த திங்கட்கிழமை (06) மீகமுவ சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற வன்முறை மோதலில், சிறைச்சாலை விசேட தந்திரோபாயப் பிரிவைச் சேர்ந்த 7 அதிகாரிகள் கொல்லப்பட்டனர். கைதிகளால் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்களிலேயே இந்த அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.
மோதல் எப்படி ஆரம்பித்தது?
ஞாயிற்றுக்கிழமை சிறைக்குள் நிலவிய பதற்றமான சூழல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதையடுத்து, திங்கட்கிழமை காலை கைதிகளுக்கு உணவு மற்றும் சிற்றுண்டி விநியோகம் செய்ய சிறை அதிகாரிகள் முயன்ற போதே இந்த மோதல் வெடித்தது. விநியோக நடவடிக்கையின் போது கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனைத் தடுக்கச் சென்ற சிறை அதிகாரி ஒருவர் கற்கள் மற்றும் ஏனைய பொருட்களால் தாக்கப்பட்டார்.
பல்லன்சேனை சிறைச்சாலைக்கு அண்மையில் நியமிக்கப்பட்டிருந்த பிரதம சிறை அதிகாரி, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரச் சென்றிருந்த போது கைதிகளால் தாக்கப்பட்டார். அவர் சக அதிகாரிகளால் மீட்கப்பட்ட போதிலும், நிலைமையைச் சீர்செய்ய உள்ளே நுழைந்த சிறை அவசர கால தாக்குதல் தந்திரோபாயப் பிரிவின் அதிகாரிகள் கடும் தாக்குதலுக்கு உள்ளாகினர். சில அதிகாரிகள் கற்களால் தலைப் பகுதியில் தாக்கப்பட்டதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வன்முறை மோதலில் மொத்தம் 27 பேர் உயிரிழந்ததுடன், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
