Headlines

பஸ் கட்டண திருத்தம் முறையற்றது: தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு

வருடாந்த பஸ் கட்டண திருத்தம் முறையற்ற வடிவில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள லங்கா தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் (LPBOA), கட்டணங்களை ஒழுங்குபடுத்துவதில் அரசாங்கம் திட்டமிட்டே தவறியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

தற்போது நாடு முழுவதும் 10,000 இற்கும் மேற்பட்ட குறுகிய தூர பஸ்களும், சுமார் 3,000 நீண்ட தூர பஸ்களும் சேவையில் ஈடுபட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

குறுகிய மற்றும் நீண்ட தூர பஸ் சேவைகளுக்கு என இரண்டு வெவ்வேறு கட்டணக் கட்டமைப்புகளை அறிமுகப்படுத்துவது பயணிகளுக்குத் தேவையற்ற சுமையை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், எரிபொருள் விலைகள் தொடர்ந்து குறைந்தால், குறுகிய தூர சேவைகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட 12% கட்டண அதிகரிப்புக்கு என்ன நடக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். டீசல் விலை மேலும் குறைந்தாலும், குறுகிய தூர பஸ் கட்டணங்களை ஆபரேட்டர்களால் குறைக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வருடாந்த கட்டண திருத்தத்தின் கீழ் நீண்ட தூர பஸ் சேவைகளுக்கு 20% கட்டண அதிகரிப்புக்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளதாகத் தெரிவித்த கெமுனு விஜேரத்ன, முன்மொழியப்பட்டுள்ள இந்தத் தீர்மானமானது எதிர்காலத்தில் தனியார் பஸ் தொழில்துறையை கடுமையான நெருக்கடிக்குள் தள்ளக்கூடும் என எச்சரித்தார்.

இதேவேளை, முன்மொழியப்பட்டுள்ள வருடாந்த பஸ் கட்டண திருத்தம் இன்று (05) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *