இலங்கையின் பொருளாதார மீட்சித் திட்டத்தில் அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் நாட்டின் தாங்கும் திறன் குறித்து சர்வதேச நாணய நிதியம் (IMF) பாராட்டுத் தெரிவித்துள்ளது.
IMF இன் ஆசியா மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சோனாலி ஜெயின்-சந்திரா (Sonali Jain-Chandra) தலைமையிலான தூதுக்குழுவினர் இன்று (30) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்த போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. ஜூன் 24 முதல் 30 ஆம் திகதி வரை கொழும்பில் இடம்பெற்ற IMF தூதுக்குழுவின் விஜயத்தின் நிறைவை இந்த சந்திப்பு குறிக்கிறது.
இந்த சந்திப்பின் போது, IMF ஆதரவுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் ஏனைய பல நாடுகளை விட இலங்கை அதிக முன்னேற்றம் கண்டுள்ளதாக தூதுக்குழுவினர் சுட்டிக்காட்டினர். பல்வேறு வெளிப்புற சவால்களுக்கு மத்தியிலும் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணியமைக்காகவும், சீர்திருத்தங்களை அர்ப்பணிப்புடன் முன்னெடுத்தமைக்காகவும் அரசாங்கத்திற்கு அவர்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர். அத்துடன், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் 7ஆவது மதிப்பாய்வின் போது இலங்கையின் திட்டச் செயற்பாடுகள் முறையாக மதிப்பிடப்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, வெளி அழுத்தங்களுக்காக அன்றி, நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்கான அவசியத்தை உணர்ந்தே IMF திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் முழுமையாக அர்ப்பணிப்புடன் இருப்பதாகத் தெரிவித்தார். அத்துடன், பொருளாதார மீட்சியின் பலன்கள் நேரடியாக மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் இறுதி நோக்கம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அமெரிக்க வரிகள், டிட்வா சூறாவளி (Cyclone Ditwah) மற்றும் மத்திய கிழக்கு மோதல்கள் போன்ற வெளிப்புற சவால்களுக்கு மத்தியிலும், பொதுமக்களுக்கு தேவையற்ற சுமைகளைச் சுமத்தாமல், பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க அரசாங்கம் விரைந்து செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார். அரசாங்கத்திற்கும் IMF இற்கும் இடையிலான நெருக்கமான மற்றும் ஆக்கபூர்வமான உறவு காரணமாகவே இந்த சீர்திருத்தத் திட்டம் பெரும் தடைகளின்றி சீராக முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
