Headlines

மகார சிறைச்சாலை கலவரம்: 150 மில்லியன் ரூபாவுக்கும் அதிக சேதம்; ஒருவர் பலி.

மகார சிறைச்சாலையில் நேற்று ஏற்பட்ட அமைதியற்ற நிலைமையின் போது, 150 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மோதலின் போது சிறை வளாகத்தினுள் உள்ள பல கட்டிடங்கள், கூரைகள் மற்றும் தொழிற்பயிற்சி உபகரணங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

சுமார் 13 மணித்தியாலங்களுக்கும் மேலாக நீடித்த இக்கலவரத்தின் போது, கைதிகள் சிறைச்சாலைக்குள் இருந்து கற்களை வீசித் தாக்கியுள்ளனர். இதனால் சிறைச்சாலையை அண்மித்த பகுதிகளில் உள்ள பல வீடுகளும் சேதமடைந்துள்ளன.

“சாத்தான்”, “அசார்”, “பெட்டா” மற்றும் மற்றொரு கைதி ஆகிய நால்வரே இந்தக் கலவரத்திற்குத் தலைமை தாங்கியுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, கலவரத்தில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட 104 கைதிகள் பூசா சிறைச்சாலை உட்பட 7 பிற சிறைச்சாலைகளுக்கு உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

4,100 க்கும் மேற்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மகார சிறைச்சாலையில் நேற்று (01) மாலை 4.00 மணியளவில் ஆரம்பமான இக்கலவரம், இன்று (02) காலை 6.00 மணியளவில் பாதுகாப்புப் படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இச்சம்பவத்தில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.

சிறைச்சாலையினுள் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து ஏற்பட்ட போதைப்பொருள் தட்டுப்பாடு காரணமாகவே இக்கலவரம் தூண்டப்பட்டிருக்கலாம் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

நேற்று காலை நான்கு கைதிகள் சிறை நிர்வாகத்திற்கு எதிராக சிறைக்கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து நிலைமை தீவிரமடைந்தது. நிலைமையை ஆராயச் சென்ற சிரேஷ்ட சிறை அதிகாரி மீது கைதிகள் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து, சிறை மருத்துவமனையில் இருந்த மருந்துகள், சமையலறையில் இருந்த கூர்மையான உபகரணங்கள் மற்றும் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்த துப்பாக்கிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றிய பின்னர் சிறை அதிகாரிகள் அப்பகுதியிலிருந்து தற்காலிகமாக விலகியுள்ளனர்.

கலவரத்தின் போது, சுமார் 1,500 கைதிகள் கட்டுமானத்தில் இருந்த சுவரின் ஒரு பகுதியை உடைத்து தப்பிச் செல்ல முயன்றனர். இதனைத் தடுக்க சிறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மற்றொரு குழுவினர் சிறை கட்டிடம் ஒன்றுக்கு தீ வைத்ததுடன், பறிமுதல் செய்யப்பட்டு சேமித்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்களை உடைத்து பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

கைதிகள் பல வார்டுகளின் பூட்டுகளை உடைத்து மற்ற கைதிகளையும் வௌியேற அனுமதித்துள்ளனர். எனினும், சில கைதிகள் வௌியேற மறுத்து தத்தமது அறைகளிலேயே தங்கியிருந்த நிலையில், அவர்கள் கலவரத்தில் ஈடுபட்டவர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

காயமடைந்த ஏழு கைதிகள் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவர் வத்தளை, ஹேனல பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மோட்டார் சைக்கிள் திருட்டு மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்.

இதற்கிடையில், இது குறித்து கருத்துத் தெரிவித்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, மகார சிறைச்சாலை சம்பவம் இதற்கு முன்னர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தில் இருந்து வேறுபட்டது என்றார். நீர்கொழும்பு சம்பவம் கைதிகளுக்கு இடையிலான மோதல் என்றும், மகார சம்பவம் கைதிகளுக்கும் சிறை அதிகாரிகளுக்கும் இடையிலான மோதல் என்றும் அவர் விளக்கினார்.

சிறைகளுக்குள் கலவரங்களை ஏற்படுத்துவதற்கு வெளியிலிருந்து ஏதேனும் குழுக்கள் திட்டமிட்டுச் செயற்படுகின்றனவா என்ற சந்தேகம் உள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடி நிலைமை இத்தகைய கலவரங்களுக்கு ஒரு காரணியாக இருக்கலாம் என்று ஒப்புக்கொண்ட நீதி அமைச்சர், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே இந்த பிரச்சினை இருந்ததாகவும், அதனைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *