Headlines

மகாவலி கங்கையை அண்டிய பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை!

மகாவலி கங்கையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில மணி நேரங்களாக இப்பகுதிகளில் பெய்து வரும் மழை, மேலும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படக்கூடிய அபாயம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வெள்ள அபாய எச்சரிக்கையானது பின்வரும் பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்குப் பொருந்தும்:

  • உடுநுவரை
  • உடபலாத்தை
  • யட்டிநுவரை
  • தொழுவை
  • கொத்மலை
  • பஸ்பாகே
  • கங்க இஹல கோரளை
  • பஸ்பாகே கோரளை
  • கங்கவட்ட கோரளை
  • ஹாரிஸ்பத்துவ
  • பாததும்பர

எனவே, இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும், ஏற்படக்கூடிய வெள்ளப் பெருக்கிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

தொடர்ந்து மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் எனவும், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் இது தொடர்பில் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *