தனுஷ்கோடிக்கு படகு மூலம் சட்டவிரோதமாக வந்த இரண்டு இலங்கை பிரஜைகளை இந்திய கடலோர காவல்படையினர் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சாகர் கவாச் (Sagar Kavach) என்ற கடலோர பாதுகாப்பு பயிற்சியின் போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடலோர காவல்படை வீரர்கள், கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருவரை கண்டு பிடித்துள்ளனர்.
விசாரணையில், அவர்கள் இருவரும் இலங்கையின் வத்தளை பகுதியைச் சேர்ந்த ஜி. விக்னேஸ்வரன் (31) மற்றும் எம். லூசிநாத் (30) என அடையாளம் காணப்பட்டனர்.
அவர்கள் மேலதிக விசாரணைக்காக கடலோர காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த வியாழக்கிழமை வத்தளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என இலங்கை அதிகாரிகள் சந்தேகிப்பதாக ‘தி ஹிந்து’ (The Hindu) ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கூடுதலாக, இவர்கள் இருவரும் இலங்கையில் மூன்று போதைப்பொருள் தொடர்பான வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர்.
இவர்களைக் காவலில் வைக்கக் கோரி இலங்கை அதிகாரிகள் விடுத்த தகவலையடுத்து, சந்தேகநபர்கள் இருவரும் திருச்சி மத்திய சிறை வளாகத்திற்குள் உள்ள சிறப்பு முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்படை வட்டாரங்கள் தெரிவித்தன.
இவர்கள் இருவரும் இன்னும் ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
