அஜர்பைஜானின் பாகு நகரில் அக்டோபர் 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ள ஆசியாவில் பரஸ்பர நடவடிக்கை மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கான மாநாட்டின் (CICA) 7வது உச்சிமாநாட்டில் இலங்கைப் பிரதிநிதிகள் குழுவிற்கு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமை தாங்கவுள்ளார்.
“வலுவான CICA: ஆசியாவில் இணைப்பு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நிலையான வளர்ச்சி” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறவுள்ள இந்த உச்சிமாநாட்டில் அமைச்சர் விஜித ஹேரத் இலங்கையின் சார்பில் சிறப்புரையாற்றவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது, கஜகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடனும், மாநாட்டை நடத்தும் அஜர்பைஜான் நாட்டின் தலைவர்கள் மற்றும் CICA அமைப்பின் பொதுச் செயலாளருடனும் அமைச்சர் விஜித ஹேரத் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
தெற்காசியா, தென்கிழக்காசியா, மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியங்களைச் சேர்ந்த 28 உறுப்பு நாடுகளின் தலைவர்கள், அரசாங்கத் தலைவர்கள் மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் இந்த 7வது CICA உச்சிமாநாட்டில் ஒன்றிணையவுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மத்திய ஆசியாவின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளுடன் புதிய பொருளாதாரக் கூட்டாண்மைகளை உருவாக்குவதற்கும், பரந்த ஆசியக் கண்டத்துடனான இலங்கையின் ஈடுபாட்டை மேலும் ஆழப்படுத்துவதற்கும் இந்த விஜயம் ஒரு முக்கிய வாய்ப்பாக அமையும் எனக் கருதப்படுகிறது.
ஆசியப் பிராந்தியத்தில் ஒத்துழைப்பையும் பாதுகாப்பையும் மேம்படுத்துவதற்காகச் செயல்படும் மிகப்பெரிய பிராந்திய அரசுகளுக்கிடையேயான மன்றமாக CICA விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
