Headlines

இந்திய குடியரசுத் துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் ஏப்ரல் 19இல் இலங்கை வருகை

இந்திய குடியரசுத் துணைத் தலைவர் திரு. சி. பி. ராதாகிருஷ்ணன், வரும் ஏப்ரல் 19 முதல் 20 ஆம் தேதி வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை மற்றும் இந்தியா இடையே நீண்டகாலமாக நிலவி வரும் உறவுகளை வலுப்படுத்தும் வகையிலும், அண்மைய உயர்மட்ட இராஜதந்திர ஈடுபாடுகளின் தொடர்ச்சியாகவும் இந்தச் சந்திப்புகள் அமையவுள்ளன.

இந்திய குடியரசுத் துணைத் தலைவர், இலங்கையின் அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களுடன் கலந்துரையாடும் வகையிலான பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்பார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டு, இந்த விஜயத்தின் போது பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) பரிமாறப்பட உள்ளன. குறிப்பாக, இந்திய அரசின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் ‘டிட்வா’ (Ditwah) புயல் மறுவாழ்வு தொடர்பான திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு ஆகியவற்றில் இந்த ஒப்பந்தங்கள் கவனம் செலுத்தும்.

குடியரசுத் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணனுடன் இந்திய அரசின் உயர்மட்ட தூதுக்குழுவொன்றும் இந்த விஜயத்தில் கலந்துகொள்ளவுள்ளது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *