ஆசிரியர் நியமனம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பிற்கு அமைவாக 23,000 ஆசிரியர்களை நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் நியமனச் செயற்பாடுகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இந்த நியமனங்கள் மூலம் 2027ஆம் ஆண்டளவில் நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை கணிசமாகக் குறைக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.
ஜூன் 2ஆம் திகதி கல்வி அமைச்சின் இசுருபாய வளாகத்தில் நடைபெற்ற மேல் மாகாண தேசிய பாடசாலைகளின் அதிபர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் திறன் அபிவிருத்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியின் போது, பாடசாலை நிர்வாகம், அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்துவதில் நிதி வெளிப்படைத்தன்மை மற்றும் நாட்டின் புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான ஏற்பாடுகள் குறித்து அதிபர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன் பாடசாலைகளை நிர்வகிப்பதில் தாங்கள் எதிர்கொள்ளும் நடைமுறை சவால்களை முன்வைப்பதற்கும் அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
வளப் பற்றாக்குறைகள் மற்றும் ஏனைய சவால்களுக்கு மத்தியிலும் கல்விச் செயற்பாடுகளைத் தடங்கலின்றித் தொடர்வதில் பாடசாலை அதிபர்கள் வகிக்கும் முக்கிய பங்கை அரசாங்கம் அங்கீகரிப்பதுடன், அவர்களின் அர்ப்பணிப்பான முயற்சிகளைப் பெரிதும் பாராட்டுவதாகவும் கலாநிதி அமரசூரிய தெரிவித்தார்.
கல்வித் துறையை பாதிக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், அனைத்து மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இலங்கையின் பாடசாலைக் கட்டமைப்பை ஒரு சிறந்த உருமாற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கும் அரசாங்கம் நீண்டகால வியூகமொன்றை வகுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
