Headlines

எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே அழியும் பிரபஞ்சம்: ஸ்பெயின் விஞ்ஞானிகளின் அதிர்ச்சித் தகவல்!

பிரபஞ்சம் உருவானது ‘பெருவெடிப்பு’ (Big Bang) என்றால், அதன் முடிவும் ஒரு ‘பெருநெருக்கடி’ (Big Crunch) என்பதா? பல டிரில்லியன் ஆண்டுகள் வரை விரிவடையும் என நம்பப்பட்ட பேரண்டம், எதிர்பாராத விதமாக பல டிரில்லியன் ஆண்டுகள் முன்னதாகவே முற்றிலும் அழிந்துவிடும் என ஸ்பெயின் விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு எச்சரிக்கிறது. எந்தவொரு தோற்றத்திற்கும் அழிவு நிச்சயம் என்ற இயற்கையின் நியதி, நமது பிரபஞ்சத்திற்கும் பொருந்தும் என்பதை இந்த ஆய்வு ஆழமாக உறுதிப்படுத்துகிறது.

ஏன் இந்த முரண்பாடு?

ஸ்பெயினின் ‘டோனோஸ்டியா சர்வதேச இயற்பியல் மையத்தின்’ (Donostia International Physics Centre) விஞ்ஞானி டாக்டர் ஹோங் நஹான் லுயூ மற்றும் அவரது குழுவினர் சேகரித்த புதிய தரவுகள், பிரபஞ்சத்தின் ஆயுட்காலம் குறித்து பகீர் தகவல்களைத் தந்துள்ளன.

இதுவரை, ‘டார்க் எனர்ஜி’ (Dark Energy) எனப்படும் மர்மமான விசை பிரபஞ்சத்தை எப்போதும் விரிவடையச் செய்யும் என்றும், அதனால் அழிவே இல்லை என்றும் விஞ்ஞானிகள் நம்பினர். ஆனால், ‘டார்க் எனர்ஜி சர்வே இன்ஸ்ட்ருமென்ட்’ மூலம் 47 மில்லியன் கேலக்ஸிக்களை ஆராய்ந்ததில், டார்க் எனர்ஜி நிலையானது அல்ல, அது காலப்போக்கில் மாறக்கூடியது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

பிரபஞ்சத்தின் வயது – 30களில் உள்ளது!

டாக்டர் ஹோங் நஹான் லுயூ குழுவினரின் கணிப்புப்படி, பிரபஞ்சத்தின் முழு ஆயுட்காலம் வெறும் 33.3 பில்லியன் ஆண்டுகள் மட்டுமே. தற்போது பிரபஞ்சத்தின் வயது 13.8 பில்லியன் ஆண்டுகள். அதாவது, இனி மீதமுள்ள காலம் சுமார் 19.5 பில்லியன் ஆண்டுகள் மட்டுமே. மனிதர்களின் சராசரி ஆயுளோடு ஒப்பிட்டுப் பார்த்தால், நமது பேரண்டத்திற்கு இப்போது ’30 வயதின்’ தொடக்கத்தில் உள்ளது. இது பிரபஞ்சத்தின் முழு ஆயுளில் 41 சதவீதத்தைக் கடந்துவிட்டது என்பதை உணர்த்துகிறது.

எப்படி அழியும்? ‘பிக் கிரஞ்ச்’ (Big Crunch) எச்சரிக்கை:

டார்க் எனர்ஜியின் விசை குறையும்போது, பிரபஞ்சம் விரிவடைவது ஒரு கட்டத்தில் நின்று, அப்படியே தலைகீழாக மாறி தன்னைத் தானே உள்நோக்கி இழுக்கத் தொடங்கும். இதுதான் ‘பிக் கிரஞ்ச்’ (Big Crunch) என்று அழைக்கப்படுகிறது. பிரபஞ்சம் உள்நோக்கிச் சுருங்கும்போது, விண்வெளியில் உள்ள அனைத்து கேலக்ஸிகள், நட்சத்திரங்கள் மற்றும் பூமி உள்ளிட்ட கிரகங்களும் மிகக் கொடூரமாக ஒன்றுடன் ஒன்று அழுத்தப்படும்.

“பிரபஞ்சம் சுருங்கச் சுருங்க, பொருட்கள் அனைத்தும் ஒன்றாகத் தள்ளப்பட்டு ராட்சத கருந்துளைகளை (Black Holes) உருவாக்கும். இறுதியில் ஒட்டுமொத்த பிரபஞ்சமே இந்தக் கருந்துளையில் மூழ்கி, அதன் மையப் புள்ளிக்குள் மறைந்துவிடும் சாத்தியக்கூறுகள் அதிகம்” என டாக்டர் ஹோங் நஹான் லுயூ தெரிவித்துள்ளார்.

கவலை வேண்டாம், காலமுண்டு!

இந்த சம்பவங்கள் நடக்க இன்னும் 19.5 பில்லியன் ஆண்டுகள் இருப்பதால், நாம் இப்போதே கவலைப்படத் தேவையில்லை. மேலும், இன்னும் 4 முதல் 10 பில்லியன் ஆண்டுகளுக்குள் நமது பால்வெளி மண்டலமும் (Milky Way), ஆண்ட்ரோமடா கேலக்ஸியும் மோதிக்கொள்ளும் சூழல் இருப்பதால், அதற்கு முன்பே பூமிக்குரிய கட்டமைப்பு முற்றிலும் மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இது புதிய கண்டுபிடிப்பு என்பதால், முழுமையாக உறுதிப்படுத்த விஞ்ஞானிகளுக்கு இன்னும் கூடுதல் காலம் தேவைப்படும். இந்த விரிவான ஆய்வறிக்கை அடுத்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *