சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட “எஹிபஸ்ஸிகோ அமைதி நடைப்பயணத்தின்” (Ehipassiko Walk for Peace) இரண்டாவது நாள் இன்றாகும் (23).
நடைப்பயணத்தின் இன்றைய பகுதி, மாத்தளையிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அலுவிஹாரை விகாரையிலிருந்து ஆரம்பித்து கண்டியிலுள்ள ஸ்ரீ தலதா மாளிகையை சென்றடையத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த அமைதி நடைப்பயணம் வியட்நாமின் வணக்கத்திற்குரிய பன்னகார தேரோ தலைமையிலான பௌத்த துறவிகள் குழுவினால் நேற்று (22) தம்புள்ளை புனித நகரிலிருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஜய ஸ்ரீ மகா போதியிலிருந்து பெறப்பட்ட புனித போதி மரக்கன்றை ஏந்திச் செல்லும் இந்த ஆன்மீக ஊர்வலம், ஒற்றுமை, கருணை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் பிரதான நகரங்கள் ஊடாக பயணிக்கவுள்ளது.
முன்னதாக, 200க்கும் மேற்பட்ட பௌத்த துறவிகள் அமெரிக்காவில் டெக்சாஸ் முதல் வாஷிங்டன் வரை 10 மாநிலங்களைக் கடந்து 110 நாட்கள் அமைதி நடைப்பயணத்தை மேற்கொண்டு, உலகளாவிய கவனத்தை ஈர்த்திருந்தனர்.
“எஹிபஸ்ஸிகோ அமைதி நடைப்பயணம்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த முயற்சி, தற்போது இலங்கையில் அரச அனுசரணையுடன் ஏப்ரல் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதற்கமைய, வியட்நாமின் வணக்கத்திற்குரிய பன்னகார தேரோ தலைமையிலான துறவிகள் குழு நிகழ்வில் பங்கேற்பதற்காக நேற்று இலங்கை வந்தடைந்தது.
“ஆலோகா” என்ற பெயருடைய நாய் ஒன்றும் துறவிகளுடன் இணைந்து இந்தப் பயணத்தில் பங்கேற்கிறது.
