கொழும்பு ஜனாதிபதி செயலக வளாகத்திற்குள் தங்கியிருப்பதைத் தடுத்து, பூஜ்ய உளபனே சுமனங்கல தேரர் மற்றும் 53 பேருக்கு எதிராகக் கொழும்பு கோட்டை நீதிவான் பசான் அமரசேன இன்று (16) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பொலிஸார் மன்றில் முன்வைத்த உத்தியோகபூர்வ சமர்ப்பணங்களைக் கவனத்தில் கொண்ட நீதிவான், நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காகச் சிறை தண்டனை அனுபவித்து வரும் கலேகொடஅத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுதலை செய்யக் கோரி அச்சுறுத்தும் பாணியில் தங்கியிருந்த குழுவினருக்கு எதிராக இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
ராஜபக்ஷ குடும்ப ஊழல்வாதிகளும் அரசியல் அனாதைகளும் பின்னணியில்:
நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்தும், நாட்டின் சட்டக் கட்டமைப்பைச் சவாலுக்குட்படுத்தியும் முன்னெடுக்கப்பட்ட இந்தச் சட்டவிரோதப் போராட்டத்தின் பின்னணியில், நாட்டைப் பொருளாதார அழிவுக்குக் கொண்டு சென்ற ராஜபக்ஷ குடும்பத்தின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP), சர்வ ஜன பலய, மற்றும் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்ற தீவிரவாத அரசியல்வாதிகளின் தூண்டுதல்களும் ஆதரவுகளும் நேரடியாக இருந்தமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நாட்டின் நீதியையும் சட்டத்தையும் தங்களின் அரசியல் லாபத்திற்காக வளைக்க முயலும் இத்தகைய சுயநலச் சக்திகள், பிக்குகளைக் கேடயமாகப் பயன்படுத்திச் செய்த அடாவடித்தனத்திற்கு நீதிமன்றம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.
போக்குவரத்து சீரமைப்பு மற்றும் நீதிமன்ற உத்தரவின் பின்னணி:
நேற்று மாலையுடன் ஜனாதிபதி செயலகத்தைச் சென்றடைந்த இந்தப் பாதயாத்திரைக் குழுவினருடன் ஜனாதிபதியின் செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகள் குறித்து ஆராய ஒரு மாத கால அவகாசம் கோரியபோதிலும், அதனை நிராகரித்த பிக்குகளும் ஆதரவாளர்களும் இரவு 11.00 மணி வரை வீதியை அடைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பின்னர் பொலிஸாருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுகளைத் தொடர்ந்து, இரவு 11.10 மணியளவில் வீதியை விட்டு விலகி, ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரே உள்ள நடைபாதைக்குப் போராட்டக்காரர்கள் நகர்ந்தனர். இதன் மூலம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உள்ள பிரதான வீதி முற்றாகத் திறக்கப்பட்டு, வாகனப் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியது.
இருப்பினும், அரச நிர்வாகத்திற்குத் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுத்து வந்த இந்தக் குழுவினருக்கு எதிராகப் பொலிஸார் இன்று நீதிமன்றத்தை நாடிய நிலையில், ஜனாதிபதி செயலக வளாகத்திற்குள் தங்கியிருப்பதைத் தடுத்து 54 பேருக்கு எதிராக கோட்டை நீதிவான் நீதிமன்றம் இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
சட்டம் அனைவருக்கும் சமமானது என்பதையும், அரசியல் செல்வாக்கையோ மத அடையாளங்களையோ பயன்படுத்தி நீதிமன்றத் தீர்ப்புகளை மாற்றியமைக்க முடியாது என்பதையும் இந்த நீதிமன்ற உத்தரவு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
