இராஜதந்திர கடவுச்சீட்டைப் பெறுவதற்காக போலித் தனிப்பட்ட தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் அபராதத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (08) தள்ளுபடி செய்துள்ளது.
தீர்ப்பை வழங்கிய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, மேன்முறையீட்டாளருக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றம் முன்னர் வழங்கிய தீர்ப்பை உறுதிப்படுத்தியதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் சஷி வீரவன்சவைக் குற்றவாளியாகக் கண்டு, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 100,000 ரூபா அபராதமும் விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
