இலங்கையின் மாணவர்கள் உலகத்தை ஆக்கபூர்வமாகவும் விமர்சன ரீதியாகவும் சிந்திக்கும் ஆற்றல் கொண்டவர்கள் எனவும், அவர்களின் முழுமையான திறன்களை வெளிக்கொண்டு வருவதற்குத் தேவையான அறிவையும் நவீன தொழில்நுட்பங்களையும் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பலாங்கொடை வித்யாலோக மத்திய கல்லூரியில் நேற்று (04) நடைபெற்ற மாணவர்களின் ஆக்கங்களை வெளிப்படுத்தும் ‘அருமசிய’ கண்காட்சியைத் திறந்து வைத்து, பாடசாலையின் புதிய மூன்று மாடிக் கட்டடத்துக்கான அடிக்கல்லை நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்:
“இலங்கையின் முதலாவது பெண் பிரதமர் கல்வி கற்ற பலாங்கொடை வித்யாலோக மத்திய கல்லூரியில் நடைபெறும் இந்த விசேட நிகழ்வில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். மனப்பாடம் செய்து பரீட்சைகளை மாத்திரம் இலக்காகக் கொண்ட கல்வி முறைக்கு பதிலாக, நடைமுறை மற்றும் திறன் அடிப்படையிலான புதிய கல்விச் சீர்திருத்தங்களை நாங்கள் அறிமுகப்படுத்தவுள்ளோம். 2027 ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்படவுள்ள இந்தப் புதிய கல்விச் சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசாங்கம் தற்போது முறையாகச் செய்து வருகிறது.
பாடசாலையை விட்டு வெளியேறும் ஒவ்வொரு மாணவனும் தனது தனிப்பட்ட திறமைக்கும், நவீன தொழிலாளர் சந்தையின் தேவைகளுக்கும் ஏற்றவாறு தொழில் மற்றும் தொழில்நுட்பக் கல்வியைப் பெறுவதை உறுதி செய்வதே எமது பிரதான நோக்கமாகும். பல்கலைக்கழகக் கல்விக்கு நிகரான கௌரவமும் அங்கீகாரமும் கொண்ட ஒரு துறையாகத் தொழிற்கல்வியை மாற்றுவதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம்,” எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வசந்த புஷ்பகுமார, சுனில் ராஜபக்ஷ, பலாங்கொடை நகர பிதா மற்றும் நகர சபை உறுப்பினர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
