Headlines

தெல்தெனிய கொலை வழக்கு: பிரதான சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது.

தெல்தெனிய கொலை வழக்குடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் மற்றும் அவரது மனைவி யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவரெலியா பிரிவின் மேற்பார்வையில், வலான குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் யாழ்ப்பாணக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.

நேற்று (24) வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் வரை பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த போது, அவர்கள் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட போது, பிரதான சந்தேகநபர் முகமூடி அணிந்திருந்ததாகவும், அவரது மனைவி முஸ்லிம் பெண் போர்வையில் வேடமிட்டு இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளின் போது, சந்தேகநபர், வவுனியாவிலிருந்து குருநாகலிற்குச் சென்று, தனது ஏனைய இரு பிள்ளைகளையும் பார்த்துவிட்டு, பின்னர் பொலிஸில் சரணடையத் திட்டமிட்டிருந்ததாக விசாரணையாளர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்கள் அண்மைய நாட்களாக நீர்கொழும்பு மற்றும் சிலாபம் பகுதிகளில் தங்கியிருந்ததாகவும், கடல் மார்க்கமாக நாட்டிலிருந்து தப்பிச் செல்ல முயன்றதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வலான குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒழுகலவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

தெல்தெனிய பொலிஸாருக்கு கிடைத்த அநாமதேய தொலைபேசி அழைப்பின் பின்னர், பூட்டியிருந்த வாகனம் ஒன்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

உயிரிழந்தவர் வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய அம்பாறை வைத்தியசாலையின் இயன்மருத்துவ சிகிச்சை நிபுணர் என அடையாளம் காணப்பட்டார்.

விசாரணைகளின்படி, பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலன் அவரது சடலத்தை வாகனத்தில் ஏற்றிச் சென்று, அந்த இடத்தில் விட்டுவிட்டு தப்பியோடியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

அந்தப் பெண் ஜூன் 3 முதல் 16 வரை நுவரெலியாவில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்ததும், காதலன் அவரை மயக்கமடைந்த நிலையில் தூக்கிச் சென்றதும் CCTV காட்சிகளில் பதிவாகியுள்ளது எனப் பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

முதலில் தெல்தெனிய பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தவர் காதலன் எனக் நம்பப்படுகிறது. இருப்பினும், பின்னர் அவர் தலைமறைவாகி இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *