Headlines

தேர்தல் முடிந்தது.. உண்மை வெளிவந்தது: “தங்கம் வாங்காதீங்க” – மோடியின் அறிவிப்பால் பொருளாதாரப் பேரிடர்!

தேர்தல் களம் முடியும் வரை “எல்லாம் நன்றாக இருக்கிறது” என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டது. ஆனால், தேர்தல் முடிந்த சில நாட்களிலேயே பொருளாதாரத்தின் கசப்பான உண்மைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் ஒரு சுருக்கமான வேண்டுகோள், நாடு முழுவதும் பெரும் விவாதத்தையும், நகைத் தொழில் துறையில் கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. “தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு காலம் தள்ளிப் போடுங்கள்” என்ற அவரது அறிவுறுத்தல், நகைத் துறையில் 40 லட்சம் பேரின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. லட்சக்கணக்கான முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பைக் குறைக்க உள்ளதாகவும் தரவுகள் அச்சுறுத்துகின்றன.

தேர்தல் பிரச்சாரங்களின் போது, நரேந்திர மோடி அரசு, நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் சிறப்பாக இருப்பதாகவும், சர்வதேச நெருக்கடிகளை இந்தியா திறம்பட கையாண்டு வருவதாகவும் ஒரு தோற்றத்தை உருவாக்கியது. ஆயில் கிரிசிஸ், ஈரான்-பாலஸ்தீனம் போர், அமெரிக்கா-இஸ்ரேல் பதற்றம் போன்றவை இந்தியாவிற்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது போன்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டது. ஆனால், தேர்தல் முடிந்தவுடன் இப்போது அரசு உண்மைகளை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் நெருக்கடி, குறிப்பாக ஈரான் போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இது இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு மற்றும் ரூபாயின் மதிப்பு மீது கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சவாலை எதிர்கொள்ள தங்க இறக்குமதியை குறைக்க பிரதமர் வலியுறுத்தியுள்ளார். 2026 நிதியாண்டில் மட்டும் சுமார் 72 பில்லியன் டாலர் அளவுக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 24 சதவீதம் அதிகம். தங்க இறக்குமதியை ஒரு ஆண்டு காலம் நிறுத்தினால், இந்தியாவின் டாலர் வெளியேற்றம் பல பில்லியன் அளவுக்கு குறையும் என்றும், இது அன்னிய செலாவணி கையிருப்பை பாதுகாக்கும் என்றும் அரசு நம்புகிறது. ஆனால், தேர்தலுக்கு முன் இந்த உண்மையை மக்கள் முன் வைக்காதது ஏன் என்ற கேள்வி வலுவாக எழுகிறது.

மோடியின் இந்த அறிவிப்பு, 40 லட்சம் பேரின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. நகைத் தொழில் இந்தியாவின் மிக முக்கியமான தொழில்களில் ஒன்று. இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பணியாற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. திருமணங்கள் உள்ளிட்ட விசேஷங்களுக்காக தங்கம் வாங்கும் வழக்கம் குறைந்தால், நகை கடைகள், உற்பத்தியாளர்கள், சிறு தொழில்கள், ஏற்றுமதியாளர்கள் என அனைவரும் வருமான இழப்பை சந்திப்பார்கள். ஒரு சிறு அறிவிப்பு, ஒரு பெரிய மக்கள் தரப்பை நேரடியாக பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.

பிரதமரின் அறிவிப்பு வெளியான உடனேயே பங்குச் சந்தையில் நகைத் துறை நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. டைட்டன் கம்பெனி 6.4%, கல்யாண் ஜுவல்லர்ஸ் 8.3%, ஸ்கை கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் 12.2%, சென்கோ கோல்டு 10.7%, பி.என். காட்கில் 7%, பி.சி. ஜுவல்லர் 5%, திரிபோவந்தாஸ் பிம்ஜி 6.3% மற்றும் தமிழகத்தின் தங்கமயில் ஜுவல்லரி 6% வரை வீழ்ச்சி கண்டன. இந்த வீழ்ச்சி, சேமிப்பை இந்த பங்குகளில் முதலீடு செய்திருந்த சாதாரண மக்களின் நிதி நிலையை கடுமையாக பாதித்துள்ளது.

தங்கம் வெறும் நகைக்கு மட்டும் பயன்படுவதில்லை. செமிகண்டக்டர் சிப்கள், சோலார் பேனல்கள், பி.சி.பி. போர்டுகள் தயாரிப்பதில் தங்கம் அத்தியாவசியமானது. தங்க இறக்குமதியை குறைப்பது, தொழில்நுட்ப உற்பத்தித் துறைகளையும் பாதித்து, அந்த தயாரிப்புகளின் தரம் மற்றும் செயல்திறனைக் குறைக்கும் அபாயம் உள்ளது.

அன்னிய செலவணி கையிருப்பை பாதுகாக்க எடுக்கப்படும் இந்த நடவடிக்கை, மற்றொரு புறம் வேலைவாய்ப்பு இழப்பு, முதலீட்டாளர்கள் பாதிப்பு மற்றும் தொழில் துறை சரிவு ஆகிய பெரிய பிரச்சனைகளை உருவாக்கியுள்ளது. தேர்தல் முடியும் வரை உண்மையை மறைத்து, இப்போது ஒரு அறிவிப்பின் மூலம் மக்களை நடுத்தெருவில் நிறுத்துவது எந்த வகையான பொருளாதார மேலாண்மை என்ற கேள்வி வலுக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *