பொருட்கள் இறக்குமதி என்ற போர்வையில் இலங்கையில் இருந்து 21 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான (700 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) பணத்தை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிய பாரிய பணச் சலவை மோசடியின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபரை நிதி புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது.
விசாரணையாளர்களின் கூற்றுப்படி, இந்த மோசடி நடவடிக்கை 2023 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. கொழும்பு கோட்டையை தளமாகக் கொண்ட ‘ஏ.ஒய். இன்வெஸ்ட்மென்ட்ஸ்’ (A.Y. Investments) என்ற நிறுவனத்தின் ஊடாக இந்த சட்டவிரோத வெளிநாட்டு நாணய பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.
ஜெப்ரி முகமது என அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர், இந்த நிறுவனத்தின் பணிப்பாளராக செயற்பட்டதோடு, பல இறக்குமதியாளர்களுக்கு சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு பணத்தை மாற்றுவதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் ஊடாக வர்த்தகர்கள் சட்டப்பூர்வ வழிகளுக்குப் புறம்பாக நிதியை வெளிநாடுகளுக்கு மாற்ற முடிந்தது, இதனால் அரசாங்க வரி மற்றும் சுங்க வருவாயில் கணிசமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் விடுத்த வெளிப்படுத்தலைத் தொடர்ந்து, இந்த பாரிய மோசடி அம்பலமானது. இதனையடுத்து நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) விசாரணைகளை ஆரம்பித்தது.
போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த பணப் பரிமாற்ற வலையமைப்புக்கும் பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கும் இடையிலான தொடர்புகள் வெளிப்பட்டதாக விசாரணையாளர்கள் தெரிவித்தனர். போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தை நாட்டிற்கு வெளியே கொண்டு செல்லவும் இந்த அமைப்பு பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் நம்புகின்றனர்.
சந்தேகநபர் ஜூன் 19 ஆம் திகதி நீர்கொழும்பில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தலைமறைவாக இருந்தபோது கைது செய்யப்பட்டார். விசாரணைகளின் போது, 36 குறைந்த வருமானம் பெறும் நபர்களின் பெயர்களில் வங்கி கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்களை அதிகாரிகள் கண்டறிந்தனர். இந்த மோசடிக்கு வங்கி அதிகாரிகள் எவரேனும் உதவினார்களா என்பது குறித்தும் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்த வலையமைப்பின் ஊடாக மாற்றப்படும் ஒவ்வொரு அமெரிக்க டொலருக்கும் 2 ரூபா கமிஷன் பெற்றதாக சந்தேகநபர் ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த மோசடி மூலம் ஈட்டிய பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டதாக நம்பப்படும் 200 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய பல ஆடம்பர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சந்தேகநபர் ஜூன் 20 ஆம் திகதி கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், அங்கு மேலதிக விசாரணைக்காக ஏழு நாள் தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டது.
இந்த சட்டவிரோத பணப் பரிமாற்ற வலையமைப்பைப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகள் உட்பட ஏனைய நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
