ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளரும், சட்டத்தரணியுமான சாகர காரியவசம் இன்று (10) காலை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் (CCIB) கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் மா அதிபருக்கு (IGP) அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிராகப் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் மா அதிபர் தொடர்பாக அவர் வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்துக்கள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்குச் சென்றிருந்த போதே காரியவசம் கைது செய்யப்பட்டார்.
குறித்த கருத்துக்கள் தொடர்பான விசாரணைக்காக அவர் இன்று குற்றப்புலனாய்வுப் பணியகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
பொலிஸ் மா அதிபர் தொடர்பாக காரியவசம் வெளியிட்ட அறிக்கை குறித்து, பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
