Headlines

மீண்டும் மேல்-நடுத்தர வருமானம் கொண்ட நாடாக உயர்ந்தது இலங்கை: உலக வங்கி அறிவிப்பு!

உலக வங்கி இன்று (ஜூலை 01) வெளியிட்டுள்ள புதிய நாட்டு வருமான வகைப்பாட்டின்படி, இலங்கை மீண்டும் ஒருமுறை ‘மேல்-நடுத்தர வருமானம் கொண்ட நாடாக’ (Upper-Middle Income Economy) வகைப்படுத்தப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட முன்னொருபோதும் இல்லாத பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, இலங்கையின் பொருளாதாரம் கடுமையான சரிவைச் சந்தித்திருந்தது. இருப்பினும், அந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வந்த மூன்றே ஆண்டுகளில், இலங்கை குறிப்பிடத்தக்க பொருளாதார மீட்சியைப் பதிவு செய்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இதற்கமைய, 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 5% வளர்ச்சியடைந்துள்ளதாக உலக வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த மீட்சிக்கு முக்கிய காரணங்களாக உற்பத்தி மற்றும் கைத்தொழில் துறைகளின் புத்துயிர் அமைந்திருப்பதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. நிதி மற்றும் சுற்றுலாச் சேவைகளின் வளர்ச்சியும் இந்த பொருளாதார மீட்சிக்கு வலுசேர்த்துள்ளன.

இது குறித்து கருத்துத் தெரிவித்த உலக வங்கி, “இலங்கையின் மீட்சி ஒரு பாடமாக அமைந்துள்ளது. 2022 இல் கடுமையான பொருளாதார நெருக்கடியால் வீழ்ச்சியின் விளிம்பிற்குச் சென்ற நாடு, மூன்றே ஆண்டுகளில் 5% ஜிடிபி வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்த மீள் வகைப்படுத்தல் இலங்கையின் மீள்திறனுக்கு (Resilience) ஒரு சான்றாகும், இருப்பினும் நாடு மிகக் குறுகிய இடைவெளியிலேயே இந்த எல்லையைத் தாண்டியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 அன்று, உலக வங்கி குழுமத்தின் அபிவிருத்தி தரவு மையம் முந்தைய ஆண்டின் தலா மொத்த தேசிய வருமானத்தின் (GNI) அடிப்படையில் நாடுகளின் வருமான வகைப்பாடுகளைப் புதுப்பிக்கிறது. இந்த ஆண்டு 218 நாடுகளை உள்ளடக்கிய இந்த வகைப்பாடு, ஜூன் 2027 இறுதி வரை உலகளாவிய ரீதியில் ஒரு குறிப்புத் தரவாகப் பயன்படுத்தப்படும். நாடுகள் சலுகைக் கடன் மற்றும் அபிவிருத்தி உதவிகளைப் பெறுவதற்கும், பொருளாதார முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கும் இந்த வகைப்பாடுகள் பெரிதும் உதவுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *