Headlines

ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டுப் பயணம்: 16.6 மில்லியன் ரூபாய் நிதி மோசடி வழக்கு செப்டம்பர் 30க்கு ஒத்திவைப்பு.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராக அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு செப்டம்பர் 30 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (08) கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், அது தொடர்பான கோப்புகள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட அரச சட்டத்தரணி சமதரி பியசேன நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார். மேலும், இவ்விடயம் தொடர்பாக சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்கு அறிவிக்கத் திகதி வழங்குமாறு அவர் கோரினார்.

இதற்கமைய, குறித்த முறைப்பாட்டை செப்டம்பர் 30 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறும், அன்றைய தினம் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

வழக்கின் பின்னணி:

முன்னாள் ஜனாதிபதி பதவியில் இருந்த காலத்தில், தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக 2023 ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்திற்குச் சென்றபோது, அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒரு நாள் அரை நாள் பயணத்தின் போது 16.6 மில்லியன் ரூபாய் அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னாள் ஜனாதிபதி கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர் ஆகஸ்ட் 26 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். மருத்துவ அறிக்கைகளை ஆராய்ந்த பின்னர், கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்கபுர, தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க உத்தரவிட்டிருந்தார்.

இருப்பினும், இந்த விஜயம் ஒரு பிரித்தானிய பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரிலேயே மேற்கொள்ளப்பட்டதாகவும், பதவியில் இருக்கும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ மற்றும் தனிப்பட்ட பயணங்களுக்கு இடையில் தெளிவான வேறுபாடு இல்லை எனவும், எனவே அரச நிதி மோசடி இடம்பெறவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் வாதிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *