Headlines

வாகன இறக்குமதி வரிகளால் விலைகள் உயரும் அபாயம்; லீசிங் கட்டுப்பாடுகளால் இறக்குமதியாளர்கள் அதிருப்தி

வாகன இறக்குமதிக்கான மேலதிக வரி மற்றும் நாணய மாற்று வீதத்தில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக, வாகனங்களின் விலைகளில் தற்காலிக அதிகரிப்பு ஏற்படக்கூடும் என இலங்கை மத்திய வங்கி (CBSL) சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள், ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட அல்லது கடன் கடிதங்கள் (LCs) திறக்கப்பட்ட வாகனங்களுக்காவது அதிகாரிகள் சலுகைகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

கடன் மற்றும் பெறுமதிக்கு இடையிலான விகிதம் (LTV) குறைக்கப்பட்டுள்ளமை, நுகர்வோரின் கொள்வனவுத் திறனையும் வாங்கும் வசதியையும் கடுமையாகப் பாதிக்கும் எனவும், இது வாகன இறக்குமதியை நேரடியாகக் கட்டுப்படுத்தும் எனவும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உப தலைவர் அரோஷ ரொட்ரிகோ தெரிவித்தார்.

இதற்கிடையில், குத்தகை (லீசிங்) விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள திடீர் திருத்தங்களை சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே விமர்சித்தார். முன்னர் 50 சதவீதமாகக் காணப்பட்ட லீசிங் வசதிகள் தற்போது 40 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளமையானது, ஏற்கனவே நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதில் இறக்குமதியாளர்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான கொள்கை மாற்றங்களை மேற்கொள்ளும்போது, ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட அல்லது இறக்குமதி நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்ட வாகனங்களுக்குச் சலுகைகளை அதிகாரிகள் உள்ளடக்கியிருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *