Headlines

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முன்னாள் சிஇஓ கபில சந்திரசேன கொள்ளுப்பிட்டியில் சடலமாக மீட்பு; தற்கொலை என சந்தேகம்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேன, கொள்ளுப்பிட்டியிலுள்ள வசிப்பிடம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

கொள்ளுப்பிட்டி பெட்ரிஸ் வீதியின் இலக்கம் 38 இல் அமைந்துள்ள வீட்டில் கபில சந்திரசேன சடலமாக மீட்கப்பட்டதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவற்துறை அத்தியட்சகர் எஃப். யூ. வூட்லர் தெரிவித்தார்.

இதற்கிடையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த கபில சந்திரசேனவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

பிணை நிபந்தனைகளை மீறியதாகக் கூறி, இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகம்ம இந்தக் கைது பிடியாணையை பிறப்பித்திருந்தார்.

பிடியாணையை உடனடியாகச் செயற்படுத்துமாறு நீதவான் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளுக்குப் பணித்திருந்தார்.

எயார்பஸ் விமான கொள்வனவின் போது இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கடந்த மார்ச் 12 ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்திரசேனவுக்கு, கடந்த செவ்வாய்க்கிழமை (மே 5) கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தது. 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 1 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகள் நிபந்தனையாக விதிக்கப்பட்டிருந்தன.

எனினும், தலா 1 மில்லியன் ரூபா சரீரப் பிணையை வழங்குவதற்காக பிணையாளர்களாக முன்னிலையாக கபில சந்திரசேன இரண்டு நபர்களுக்கு தலா 15,000 ரூபாவை வழங்கியதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்தது. இதன் மூலம் சந்தேக நபர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட பிணை நிபந்தனைகளை மீறி, நீதிமன்றம் அவர் மீது வைத்த நம்பிக்கையை சீர்குலைத்துள்ளதாக ஆணைக்குழு குற்றம் சாட்டியது.

இதன்படி, பிணைச் சட்டத்தின் கீழ் சந்தேக நபரின் பிணை உத்தரவை ரத்து செய்யுமாறும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கின் முடிவு வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றைக் கோரியிருந்தது. அத்துடன், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த சந்தேக நபரைக் கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பிக்குமாறும் கோரியது.

சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேக நபரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டு பிடியாணை பிறப்பித்தார்.

2013 ஆம் ஆண்டு 2.3 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 10 விமானங்களை கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தின் போது தலைமை நிர்வாக அதிகாரியாக செயற்பட்ட சந்திரசேன, 16 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சத்தைப் பெறச் சதி செய்ததாகவும், சிங்கப்பூரிலுள்ள வங்கிக் கணக்கொன்றில் 1.45 மில்லியன் யூரோக்களைப் பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

சந்திரசேன புரூணையில் தனது மனைவியின் பெயரில் போலி நிறுவனம் ஒன்றை உருவாக்கி, அதன் சிங்கப்பூர் கணக்கில் இலஞ்சப் பணத்தை டெபாசிட் செய்ய ஏற்பாடு செய்ததாக வழக்குத் தொடுநர்கள் தரப்புத் தெரிவித்தது. சந்திரசேன இதற்கு முன்னர் பிப்ரவரி 2020 இல் இதேபோன்ற வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *