Headlines

💰 மக்கள் மீது கூடுதல் சுமை இல்லை! வெளிநாட்டுப் பயண வரி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மோடி.

வெளிநாட்டுப் பயண வரி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர் மோடி!

டெல்லி:

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக, மக்கள் எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, வெளிநாட்டுப் பயணங்களுக்கு மத்திய அரசு புதிய வரியை விதிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தவறான தகவல்கள் வேகமாகப் பரவின.

வதந்திக்குத் திட்டவட்டமான மறுப்பு:

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி இந்தத் தகவல்களைத் திட்டவட்டமாக மறுத்து, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். வெளிநாட்டுப் பயணங்களுக்கு புதிய வரி விதிக்கும் எண்ணம் எதுவும் அரசுக்கு இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார். இது தொடர்பாகப் பரவிய தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்றும், துளி அளவும் உண்மையில்லை என்றும் அவர் கூறினார். அத்தகைய கட்டுப்பாடுகளை விதிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும், மக்கள் மீதான சுமையைக் குறைப்பதில் அரசு கவனம் செலுத்துவதாகவும் அவர் விளக்கமளித்தார்.

ஊடகத்தின் தவறும் வருத்தமும்:

முன்னதாக, CNBC-TV18 செய்தி ஊடகம், கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் மேற்கு ஆசிய மோதலால் ஏற்பட்ட நிதி நெருக்கடியைச் சமாளிக்க, வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தற்காலிக வரி விதிக்க மத்திய அரசு பரிசீலிப்பதாகச் செய்தி வெளியிட்டிருந்தது. இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்லும் பயணிகள் வாங்கும் டிக்கெட், விசா கட்டணம் உள்ளிட்டவற்றிற்கு கூடுதல் வரி விதிக்க அரசு முடிவெடுத்திருப்பதாகத் தகவல்கள் பரவின. உலக நாடுகள் கச்சா எண்ணெய் விலை உயரும்போதும், போர் காலங்களிலும் இதுபோன்று வரிகளை விதிப்பது வழக்கம் என்பதன் அடிப்படையில், CNBC-TV18 இந்தச் செய்தியை வெளியிட்டிருந்தது.

பிரதமரின் மறுப்பிற்குப் பிறகு, CNBC-TV18 தனது தவறை உணர்ந்து, செய்தியைத் திரும்பப் பெற்று, வருத்தம் தெரிவித்தது.

சுமைகளைக் குறைப்பதே அரசின் நோக்கம்:

பிரதமர் மோடி தனது ‘X’ (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் அளித்த விளக்கத்தில், “புதிய கட்டுப்பாடுகளுக்குப் பதிலாக, குடிமக்கள் மற்றும் வணிகர்களுக்கான சுமைகளைக் குறைப்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. மேலும், மக்களின் வணிகம் செய்வதை எளிமையாக்கியும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தியும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு:

இந்தியாவைப் பொறுத்தவரை, நம்முடைய கச்சா எண்ணெய் தேவையில் 85%க்கும் அதிகமாக இறக்குமதியைத் தான் சார்ந்திருக்கிறோம். எனவே உலகளாவிய எரிசக்தி விலை உயர்வால் அழுத்தத்தைச் சந்தித்து வருகிறோம். இதற்கிடையில், ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் (UAE) சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபருடன் பெட்ரோலிய இருப்புக்கள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஏற்கனவே அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் இந்தியாவில் கச்சா எண்ணெய் சேமித்து வரும் நிலையில், இந்த ஒப்பந்தம் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *