இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு (CIABOC) மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மீது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளது.
2012 ஆம் ஆண்டு கிரேக்கம் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்த காலகட்டத்தில், கிரேக்க திறைசேரி முறிகளில் (Greek T-bond) மேற்கொண்ட முதலீடுகளினால் இலங்கை அரசாங்கத்திற்கு 1.84 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக, மூன்று மாதங்களுக்குள் 100 மில்லியன் ரூபாவை வைப்பிலிட வேண்டும் என்ற நீதிமன்றத்தின் நிபந்தனையை அவர் நிறைவேற்றத் தவறியதையடுத்து, ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 67(5) பிரிவின் கீழ் இந்த புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
100 மில்லியன் ரூபா செலுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன், இதற்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை மீளப்பெற இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்தது. எனினும், ஒப்புக்கொள்ளப்பட்ட காலக்கெடுவுக்குள் குறித்த தொகையை வைப்பிலிட கப்ரால் தவறியதையடுத்து, மேல் நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
