Headlines

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோவுடன் அமைச்சர் விஜித ஹேரத் சந்திப்பு

பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெற்று வரும் 33வது ஆசியான் பிராந்தியக் கூட்டமைப்பின் (ARF) அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்திற்கு இணையாக, இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோவுடன் சுருக்கமான கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.

வியாழக்கிழமை (23) நடைபெற்ற இந்தக் கலந்துரையாடல், இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியதாக அமைச்சர் ஹேரத் எக்ஸ் (X – முன்னர் ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

33வது ஆசியான் பிராந்தியக் கூட்டமைப்பு (ARF) அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டம் மற்றும் நட்பு மற்றும் ஒத்துழைப்பு உடன்படிக்கையின் (TAC) 50வது ஆண்டு நிறைவு நினைவேந்தல் ஆகியவற்றில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் ஹேரத் ஜூலை 23 முதல் 24 வரை மணிலா சென்றுள்ளார். இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இரு கூட்டங்களிலும் அவர் உரையாற்ற உள்ளார்.

அமைச்சர், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவரும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான சிறப்புத் தூதருமான செர்ஜியோ கோரையும் (Sergio Gor) சந்தித்தார். இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மணிலாவில் நடைபெறும் 33வது ஆசியான் பிராந்தியக் கூட்டமைப்பு (ARF) கூட்டத்திற்கு இணையாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மற்றும் பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் கலிலூர் ரஹ்மான் ஆகியோரையும் சந்தித்துப் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *