அரிசியை வீட்டு உபயோகத்திற்கு அப்பால், பியர், விலங்கு தீவனம் மற்றும் இதர மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யப் பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நேற்று அனுராதபுரம் வடக்கு நீர்வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். உணவு அல்லாத பொருட்களுக்கு அரிசியைப் பயன்படுத்துவதைத் தடை செய்திருந்த வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் நீக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த கொள்கை மாற்றம், குறிப்பாக மேலதிக உற்பத்திக் காலங்களில் நெல்லுக்கு பெரிய மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த சந்தையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது விவசாயிகளுக்குத் தங்களின் அறுவடைக்குச் சிறந்த விலையை உறுதிப்படுத்த உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் ஏற்கனவே பிஸ்கட், கேக் மற்றும் பியர் போன்ற பானங்கள் உட்பட பல்வேறு அரிசி அடிப்படையிலான பொருட்களை உருவாக்கியுள்ளன. இந்த கண்டுபிடிப்புகளை வணிகமயமாக்க அரசாங்கம் இப்போது திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.
அரிசியின் கைத்தொழில் பயன்பாட்டை விரிவுபடுத்துவது சந்தையில் அதிக வாங்குபவர்களை ஈர்க்கும், அரிசி ஆலை உரிமையாளர்களின் ஆதிக்கத்தைக் குறைக்கும் மற்றும் நெல்லுக்கான தேவையை அதிகரிக்கும். இது இறுதியில் மேம்பட்ட சந்தைப் போட்டியின் மூலம் விவசாயிகளுக்குப் பயனளிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
