Headlines

இது மக்களின் தோல்வி.. காரைக்குடியில் டெபாசிட் காலி, வாக்கு வங்கியும் சரிவு; ஆதங்கத்தில் சீமான்!

சென்னை: 2026 தமிழகச் சட்டசபை தேர்தல் முடிவுகள், மாநில அரசியலில் ஒரு மாபெரும் புயலை கிளப்பியுள்ளன. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) களமிறங்கிய முதல் தேர்தலிலேயே 108 இடங்களைக் கைப்பற்றி அரியணை ஏறத் தயாராக உள்ள நிலையில், 15 ஆண்டுகளாகக் கொள்கை முழக்கமிட்டு வரும் நாம் தமிழர் கட்சியின் (நாதக) கோட்டை தரைமட்டமாகியுள்ளது.

இந்தத் தேர்தலில் தவெகவின் அசுர வளர்ச்சியை விட, நாம் தமிழர் கட்சியின் படுதோல்வி அரசியல் விமர்சகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தனி ஒருவனாகப் போராடிய சீமான் – எடுபடாத பிரசாரம்:

சென்னை முதல் கன்னியாகுமரி வரை 234 தொகுதிகளிலும் தனி நபராகச் சுழன்று சுழன்று கூட்டம் போட்டு, அசாத்திய பிரசாரம் செய்தார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். ஆனாலும், மக்கள் தீர்ப்பு அவருக்குச் சாதகமாக இல்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 35 லட்சம் வாக்குகள் பெற்று, 8 சதவீத வாக்குத் தொகையுடன் ‘மாநிலக் கட்சி’ அங்கீகாரத்தைப் பெற்றிருந்தது நாதக.

ஆனால், இந்தச் சட்டசபை தேர்தலில் அந்த வாக்கு வங்கி அப்படியே பாதியாகச் சரிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெறும் 19 லட்சத்து 72 ஆயிரம் வாக்குகள் (4 சதவீதம்) மட்டுமே இம்முறை நாதகவுக்கு கிடைத்துள்ளன. இதன் மூலம் மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தையும் நாதக இழக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

காரைக்குடியில் அதிர்ச்சித் தோல்வி:

சீமான் போட்டியிட்ட காரைக்குடி தொகுதியின் முடிவுகள் நாதகவினரை நிலைகுலையச் செய்துள்ளன. அங்கும் அவருக்கு நான்காமிடமே கிடைத்துள்ளது. பிரதான கட்சிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சீமான் அங்கே டெபாசிட்டையும் பறிகொடுத்துள்ளார். அவர் மட்டுமன்றி, நாதக வேட்பாளர்கள் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட்டை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எழும் கேள்விகள்: தொடங்கப்பட்டு இரண்டே ஆண்டுகளில் விஜய்யின் தவெகவை மக்கள் ஆட்சிக்கட்டிலில் ஏற்றத் தயாராக உள்ளனர், ஆனால் 15 ஆண்டுகளாகக் களத்தில் நிற்கும் சீமானை மக்கள் ஏன் நிராகரித்தார்கள்? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பலமாக எழுந்துள்ளது.

“இது மக்களின் தோல்வி”: வைரலாகும் சீமானின் உருக்கமான பேச்சு

தேர்தல் தோல்வி தந்த அதீத ஆதங்கத்துடன் சீமான் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில் தோல்வியை ஏற்க மறுத்து, அது மக்களின் தோல்வி என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் சீமான் பேசியதாவது:

“இவ்வளவு போராடியவர்களுக்கு, இவ்வளவு மாற்று அரசியலை எடுத்து வைத்தவர்களுக்கு இன்னும் 10 லட்சம் வாக்குகளை அளித்திருக்கலாம் என்ற வருத்தம் இருக்கிறது. நான் சட்டசபைக்குள் செல்ல வேண்டும் என்ற விருப்பம் இல்லை. நாட்டை வெல்லாமல் 2, 3 சீட்டை வென்று என்ன ஆகப்போகிறது. ஆனாலும், போயிருக்கலாம். இந்த தமிழ்ச் சமூகத்தின் குரலாக சட்டசபையில் பேசியிருக்கலாம். ஆனால், அதற்கு நமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அது நம் தோல்வி இல்லை, மக்களின் தோல்விதான்.

மேலும், தனது தொண்டர்களின் உழைப்பைப் பாராட்டிய சீமான், “என் பிள்ளைகளின் உழைப்பு அசாத்தியமானது. நானே எதிர்பார்த்தேன். நான் வென்றுவிடுவேன், இன்னும் ஐந்தாறு பேர் வெல்வோம் என கணித்திருந்தேன். இன்றைக்கு இல்லையென்றாலும் நாளை செல்வோம். இன்னும் 10 ஆண்டுகள் போராடியும் உறுதியாக வெற்றி பெறுவோம். அதில் எந்த மாற்றும் இல்லை. எந்தக் காலத்திலும் தடம்பிறழ மாட்டோம். தன்னலத்திற்காக சமரசம் செய்துகொள்ள மாட்டோம்.” எனத் தெம்பாகப் பேசியுள்ளார்.

தோல்வியிலும் கொள்கை மாற மாட்டோம் என்ற சீமானின் இந்தப் பேச்சு நாதக தொண்டர்களுக்கு ஆறுதலைத் தந்தாலும், 2026 தேர்தல் முடிவுகள் நாதகவின் எதிர்காலத்திற்கு ஒரு மாபெரும் எச்சரிக்கை மணி என்பதில் சந்தேகமில்லை.

தமிழக சட்டசபை தேர்தல் 2026-ன் அனைத்து உடனுக்குடனான தகவல்களுக்கும் ஒன்இந்தியா தமிழுடன் இணைந்திருங்கள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *