இந்திய குடியரசுத் துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் சற்று நேரத்திற்கு முன்னர் இலங்கையை வந்தடைந்தார்.
அவர் நாளை (20) வரை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டில் தங்கியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலை 9.30 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) 49 பேர் கொண்ட தூதுக்குழுவினரும் வந்தடைந்தனர் என அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
தூதுக்குழுவினரை வரவேற்பதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே உள்ளிட்ட இலங்கை அமைச்சர்கள் குழுவொன்றும் விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் முனையத்திற்கு வருகை தந்திருந்தது.
இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான தற்போதைய உயர்மட்ட இராஜதந்திர ஈடுபாடுகளின் ஒரு பகுதியாக, இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.
வெளிவிவகார அமைச்சின் கூற்றுப்படி, இந்த விஜயத்தில் பல உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் பங்கேற்பது மற்றும் அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களுடனான சந்திப்புகளும் அடங்கும்.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி, பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) பரிமாறப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவை குறிப்பாக அபிவிருத்தி பங்களிப்புகள் மற்றும் அண்மைய ‘டிட்வா’ புயல் நிலைமை தொடர்பான மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தும்.
