Headlines

இலங்கைக்குள் ஊடுருவும் வெளிநாட்டு இணைய குற்றவியல் குழுக்கள்: 37 சீனர்கள் வெளியேற்றம்

இலங்கையில் குடிவரவு சட்டங்களை மீறி இணையவழி குற்றச் செயல்களில் (Cybercrimes) ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 37 சீனப் பிரஜைகள் நேற்றிரவு (04) நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். வெலிசறை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்களது வெளியேற்றமானது, வெளிநாட்டு இணைய குற்றவியல் குழுக்கள் இலங்கைக்குள் தமது தளத்தை அமைத்துள்ளனவா என்ற பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மியான்மர், தாய்லாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளில் இயங்கி வந்த இத்தகைய பாரிய இணைய குற்றவியல் வலைப்பின்னல்கள், அங்கு சட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் இலங்கையை நோக்கி தமது செயற்பாடுகளை மாற்றி வருவதாகக் கருதப்படுகிறது. அண்மையில், குறைந்த தகுதிகளுடன் ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிக சம்பளம் வழங்குவதாகக் கூறி இலங்கை வேலைவாய்ப்பு இணையத்தளங்களில் வெளியான போலி விளம்பரங்கள், இளைஞர்களை இலக்கு வைக்கும் மோசடி வலைப்பின்னல்களின் ஆரம்பமாக இருக்கலாம் என விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

கடந்த சில நாட்களில் மட்டும் ராஜகிரிய மற்றும் மேதவெலிகட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில், சீனா, மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த 120 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், தலங்கம பகுதியில் 37 சீனப் பிரஜைகளும், கொடகந்த பகுதியில் 8 வெளிநாட்டவர்களும் இணையவழி மோசடி குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக, கணினி ஊடாக நிதி மோசடிகளில் ஈடுபட பயன்படுத்தப்படும் 24 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்களை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற 9 சீனப் பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர். மியான்மரில் இவ்வாறானதொரு மோசடி வலையமைப்பில் சிக்கி மீட்கப்பட்ட இலங்கை பெண் ஒருவர், உரிய தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் இலங்கையர்களும் இவ்வாறான குழுக்களால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு சிறைபிடிக்கப்படும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *