“Asia Tech 2026” மாநாட்டின் ஒரு பகுதியாக, சிங்கப்பூரில் கேட்ஸ் அறக்கட்டளையுடன் (Gates Foundation) இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தை துரிதப்படுத்துவது குறித்த இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
டிஜிட்டல் பொருளாதாரப் பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தலைமையிலான இலங்கை தூதுக்குழுவினர், செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல் ஆளுகை மற்றும் தரவு அடிப்படையிலான அபிவிருத்தி முயற்சிகள் தொடர்பான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்தப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்கள்:
- செயற்கை நுண்ணறிவு (AI) உத்தி: இலங்கையின் தேசிய செயற்கை நுண்ணறிவு உத்தி மற்றும் “பொது நன்மைக்கான AI” வேலைத்திட்டம் ஆகியவற்றிற்கான தொழில்நுட்ப மற்றும் ஆலோசனை ஆதரவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இலங்கையின் வரைவு AI கொள்கை கட்டமைப்பை கேட்ஸ் அறக்கட்டளை மதிப்பாய்வு செய்யவுள்ளதுடன், டிஜிட்டல் அரசாங்க உள்கட்டமைப்பை மேம்படுத்த மேலதிக தொழில்நுட்ப உரையாடல்களை முன்னெடுக்கவும் இணக்கம் காணப்பட்டது.
- டிஜிட்டல் விவசாயம் (IDAT 2): விவசாயிகளின் உற்பத்தியை மேம்படுத்துதல், சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் திறனை அதிகரித்தல் மற்றும் AI அடிப்படையிலான ஆலோசனை சேவைகளை உள்ளடக்கிய “உள்ளடக்கிய டிஜிட்டல் விவசாய மாற்றம்” திட்டத்தின் அடுத்த கட்டம் குறித்து ஆராயப்பட்டது.
- டிஜிட்டல் பொதுப் பொருட்கள்: AI Singapore மற்றும் EkStep Foundation போன்ற முன்முயற்சிகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
- அறிவுப் பகிர்வு விஜயம்: டிஜிட்டல் அடையாள அமைப்புகளில் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை ஆராய்வதற்காக, GovTech Sri Lanka இன் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு பெங்களூருக்கான அறிவுப் பகிர்வு விஜயமொன்றை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த முக்கிய சந்திப்பில் ஹரி மேனன் உள்ளிட்ட கேட்ஸ் அறக்கட்டளையின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
