இலங்கை கிரிக்கெட் (SLC) தலைவர் ஷம்மி சில்வா மற்றும் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களின் ராஜினாமாக்களை விளையாட்டுத்துறை அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளதாக விளையாட்டு அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரங்களுக்கு உட்பட்டு, விளையாட்டுச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அனைத்து நிர்வாகச் செயற்பாடுகளும் இன்றைய தினத்திலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில், தற்காலிகமாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் கொண்டு வரப்படுவதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் விளையாட்டில் நிலவும் தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் கண்டறிவதற்கும், கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும் ஒரு குழு விரைவில் நியமிக்கப்படவுள்ளதாகவும் விளையாட்டு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
