ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ (Mikhail Murashko) தலைமையிலான தூதுக்குழுவினர், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.
இந்த விஜயத்தின் போது, ரஷ்யாவிற்கும் இலங்கைக்குமிடையிலான சுகாதாரத் துறை உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸவுடன் ரஷ்ய தூதுக்குழுவினர் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளனர்.
அத்துடன், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்துடனும் ரஷ்ய தூதுக்குழுவினர் பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
ரஷ்ய சுகாதார அமைச்சர் தலைமையிலான குழுவினர் மே 4ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு விஜயம் செய்யவுள்ளனர். இதன்போது, இரு நாடுகளினதும் சுகாதார அமைச்சுகளுக்கு இடையே ஒப்பந்தங்களை எட்டவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், விசேட மருத்துவ பயிற்சி மற்றும் மேம்பட்ட பயிற்சி, பரிமாற்றத் திட்டங்கள் மற்றும் கூட்டுப் பாடநெறிகள் போன்ற கல்விசார் ஒத்துழைப்பு, ஆயுர்வேதம் மற்றும் சுகாதார சுற்றுலா உள்ளிட்ட சுகாதாரத் துறையின் பல பிரிவுகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இந்த விஜயத்தின் போது முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.
மேலும், ரஷ்ய சுகாதார அமைச்சர் மற்றும் அவரது தூதுக்குழுவினர், இலங்கையின் சுகாதார சேவையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடல்களை நடத்தி கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மிகைல் முராஷ்கோ தலைமையிலான ரஷ்ய தூதுக்குழுவினர் மே மாதம் 5ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்படத் திட்டமிட்டுள்ளனர்.
