Headlines

நிதியமைச்சின் செயலாளர் COPE குழுவில் ஆஜராகாமை: சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை!

பொது நிதிக் குழுவில் (COPF) நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும முன்னிலையாகத் தவறினால், நாடாளுமன்றப் பொறிமுறைகள் ஊடாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அக்குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவிற்கு உள்ளதாகச் சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ள முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னக்கோன், 2022 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 121 இன் கீழ் பொது நிதிக் குழு நிறுவப்பட்டதைச் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை மீறும் எந்தவொரு தனிநபருக்கும் தண்டனை விதிக்க நாடாளுமன்ற (அதிகாரங்கள் மற்றும் வரப்பிரசாதங்கள்) சட்டத்தின் கீழ் ஏற்பாடுகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

அதன்படி, எந்தவொரு தனிநபரையும் அழைக்கும் அதிகாரம் குழுத் தலைவருக்கு உண்டு, அத்தகைய அழைப்பு புறக்கணிக்கப்பட்டால், அதிகாரங்கள் மற்றும் வரப்பிரசாதச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மற்றும் தண்டனைகள் விதிக்கப்படலாம். இத்தகைய குற்றங்களுக்கு நாடாளுமன்றத்தாலோ அல்லது உச்ச நீதிமன்றத்தாலோ தண்டனை வழங்கப்படலாம் என தென்னக்கோன் வலியுறுத்தினார்.

தண்டனைகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மிகாத சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் அடங்கும். எனவே, கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் தலைமையிலான பொது நிதிக் குழுவினால் அழைக்கப்பட்டு, முன்னிலையாகத் தவறும் எந்தவொரு தனிநபரும், நாடாளுமன்ற (அதிகாரங்கள் மற்றும் வரப்பிரசாதங்கள்) சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகலாம்.

வரலாற்றில் எந்தவொரு முந்தைய அரசாங்கமும் நாடாளுமன்ற நிதிக் பொறுப்புக்கூறலுக்குச் சவால் விடுத்ததோ அல்லது நாடாளுமன்றக் குழுக்களின் அதிகாரத்தை இந்த வகையில் குறைத்து மதிப்பிட்டதோ இல்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அழைக்கப்பட்ட போதிலும் ஒருவர் முன்னிலையாகத் தவறினால், நாடாளுமன்றத்தின் கண்ணியம் மற்றும் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவதற்காகக் குழுத் தலைவர் தண்டனைகளை அமல்படுத்த வேண்டும் அல்லது ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் தென்னக்கோன் மேலும் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், பொது நிதிக் குழுவில் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும முன்னிலையாக மாட்டார் எனத் தமக்குத் அறிவிக்கப்பட்டுள்ளதாக கலாநிதி ஹர்ஷ டி சில்வா நேற்று (29) தெரிவித்தார். வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காகக் கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர், வெளிப்புறத் தரப்பினருக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக நிதி அமைச்சின் செயலாளர் இன்றைய தினம் (30) குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்தார். எனினும், இன்றைய குழு அமர்வில் கலந்து கொள்ள முடியாது என கலாநிதி சூரியப்பெரும கடிதம் மூலம் தலைவருக்குத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நடத்தி வரும் விசாரணைகள் குறித்துச் சுதந்திர சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர் மைத்திரி குணரத்ன நம்பிக்கை இல்லாமையை வெளியிட்டார்.

நேற்று இரவு (29) ஒளிபரப்பான டிவி தெரண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, ஹக்கரின் (Hacker) ஈடுபாடு குறித்து இன்னும் நேரடி முடிவுக்கு வரவில்லை என்றார். மேலதிக விசாரணைகள் தேவை என்றும், வெளிநாட்டு நிறுவனத்தின் டொமைனைப் (Domain) போலவே மின்னஞ்சல் அனுப்பப்பட்டதால் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்றும், ஒத்த பெயர்கள் மற்றும் மின்னஞ்சல் வடிவங்களைப் பயன்படுத்தியது அலட்சியத்தைக் காட்டுவதாகவும் அவர் கூறினார்.

தற்போதைய அரசாங்கத்திற்குள் ஊழல்வாதிகள் இருந்தால், பதவி வேறுபாடின்றி அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்கவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *