இலங்கை கிரிக்கெட் (SLC) சபையின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அவரது நிறைவேற்று குழுவினர் ராஜினாமா செய்ததையடுத்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தலைமையில் இடைக்காலக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவினால் இந்த புதிய இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்பு குழு (இடைக்காலக் குழு) நியமிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்பு குழுவின் உறுப்பினர்கள்:
- எரான் விக்கிரமரத்ன – (தலைவர்)
- ரோஷன் மஹாநாம
- குமார் சங்கக்கார
- துஷிரா ரதல்ல
- சிதத் வெட்டிமுனி
- திருமதி அவந்தி கொலம்பகே
- பிரகாஷ் ஷாஃப்டர்
- உபுல் குமாரப்பெரும
- டினால் பிலிப்ஸ்
“கட்டமைப்பு சீர்திருத்தங்களுக்கு” வழிவகுக்கும் வகையில் தற்காலிக நடவடிக்கையாக இலங்கை கிரிக்கெட் சபையின் கட்டுப்பாட்டை அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவர் ஷம்மி சில்வா, தொடர்ச்சியாக நான்கு முறை பதவியில் இருந்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசாங்க தலையீட்டிற்கு அனுமதி அளிப்பதில்லை. அரசியல் தலையீடு காரணமாக 2023-2024 இல் இரண்டு மாதங்களுக்கு இலங்கையை ஐசிசி இடைநீக்கம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
