வாஷிங்டன்:
ஈரான் மீதான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் (House of Representatives) வியாழக்கிழமை நடைபெறவிருந்த முக்கிய தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை குடியரசுக் கட்சித் தலைவர்கள் எதிர்பாராத விதமாக ரத்து செய்துள்ளனர்.
வாக்கெடுப்பு ரத்துக்கான பின்னணி: கடந்த பிப்ரவரி 28ஆம் திகதி முதல் ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து இராணுவத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாடாளுமன்றத்தின் முறையான ஒப்புதலைப் பெறாவிட்டால், ஈரானுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி இந்தத் போர் அதிகாரத் தீர்மானம் (War Powers Resolution) கொண்டுவரப்பட்டது. மெமோரியல் தின விடுமுறைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாஷிங்டனிலிருந்து புறப்படவிருந்த சற்று நேரத்திற்கு முன்னதாக இந்த வாக்கெடுப்பு திட்டமிடப்பட்டிருந்தது.
இதேபோன்றதொரு தீர்மானம் அமெரிக்க செனட் சபையில் செவ்வாய்க்கிழமையன்று 50-47 என்ற வாக்கு வித்தியாசத்தில் முன்னேற்றம் கண்டிருந்த நிலையில், பிரதிநிதிகள் சபையில் இந்த வாக்கெடுப்பு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆதரவு குறைகிறதா? இதற்கு முன்னதாக சபையில் கொண்டுவரப்பட்ட மூன்று போர் அதிகாரத் தீர்மானங்கள் குடியரசுக் கட்சியினரின் பெருமளவிலான ஆதரவால் முறியடிக்கப்பட்டன. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல இந்த ஆதரவு வாக்குகள் குறைந்து கொண்டே வருகின்றன. கடைசியாகக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் வாக்குகளின் சமநிலையால் (Tie) தோல்வியடைந்தது. தற்போது சில குடியரசுக் கட்சியினரும் அதிருப்தியில் இருப்பதால், வியாழக்கிழமை திட்டமிடப்பட்டிருந்த தீர்மானம் எளிதாக நிறைவேறியிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இது குறித்துப் பேசிய பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுவின் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினர் கிரிகோரி மீக்ஸ், “எந்த சந்தேகமுமின்றி இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான வாக்குகள் எங்களிடம் இருந்தன, அது அவர்களுக்கும் (குடியரசுக் கட்சியினருக்கும்) தெரியும். அதனால்தான் வாக்கெடுப்பை ஜூன் மாத தொடக்கத்திற்கு அவர்கள் ஒத்திவைத்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு விவாதங்கள்: போரை அறிவிக்கும் அதிகாரம் அமெரிக்க அரசியலமைப்பின்படி நாடாளுமன்றத்திற்கே உள்ளதே தவிர, ஜனாதிபதிக்கு அல்ல என ஜனநாயகக் கட்சியினரும் சில குடியரசுக் கட்சியினரும் சுட்டிக்காட்டுகின்றனர். தெளிவான வியூகங்கள் ஏதுமின்றி நீண்டகாலப் போருக்குள் ட்ரம்ப் நாட்டை இழுத்துச் செல்லக்கூடும் என அவர்கள் தீவிர கவலை வெளியிட்டுள்ளனர்.
அதேசமயம், நாட்டைப் பாதுகாப்பதற்காகவும் அச்சுறுத்தல்களை முறியடிப்பதற்காகவும் வரையறுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளை எடுக்க முப்படைகளின் தளபதியான ஜனாதிபதிக்கு முழு சட்ட அதிகாரம் உள்ளதாக வெள்ளை மாளிகையும் பெரும்பான்மையான குடியரசுக் கட்சியினரும் தொடர்ந்து வாதிட்டு வருகின்றனர். அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் தற்போது குடியரசுக் கட்சியினரே மிகக் குறைந்த பெரும்பான்மையுடன் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
