Headlines

ஈஸ்டர் தாக்குதல்களின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்: இன்று நாடளாவிய ரீதியில் விசேட வழிபாடுகள்!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் (21) ஏழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், உயிரிழந்தோரை நினைவுகூர்ந்து நாடளாவிய ரீதியில் விசேட சமய நிகழ்வுகள் மற்றும் பிரார்த்தனை வழிபாடுகள் இடம்பெறுகின்றன.

கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ இது தொடர்பாகத் தெரிவிக்கையில், நாட்டின் அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் இன்று காலை விசேட நினைவேந்தல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். உயிரிழந்தோரின் நினைவாக தேவாலய மணிகள் ஒலிக்கச் செய்தல், இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துதல், மெழுகுவர்த்தி அல்லது எண்ணெய் விளக்குகள் ஏற்றுதல் மற்றும் பிரார்த்தனை வழிபாடுகள் போன்றவை இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் விசேட திருப்பலி நடைபெறவுள்ளது. இதனால், திருத்தலத்தைச் சூழவுள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமல்படுத்தப்படும் என்றும், காலை 7:00 மணி முதல் திருப்பலி நிறைவடையும் வரை வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்திலும் விசேட ஆராதனை நடைபெறவுள்ளது. அத்துடன், இன்று பிற்பகல் 4:00 மணிக்கு நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி மைதானத்தில் இருந்து ஆயர்கள், அருட்தந்தையர்கள் மற்றும் இறைமக்களின் பங்களிப்புடன் பிரார்த்தனை நடைபவனி ஆரம்பமாகவுள்ளது. இந்தப் பேரணி கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலய வளாகத்தில் நிறைவடையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *